Published : 19 Jan 2023 03:40 PM
Last Updated : 19 Jan 2023 03:40 PM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக நிர்வாகக் குழுவை பாஜக அமைத்தது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம்

நயினார் நாகேந்திரன் | கோப்புப்படம்

திருநெல்வேலி: "ஈரோடு இடைத்தேர்தல் வேலைக்காகவே 14 நிர்வாகிகள் கொண்ட குழுவை பாஜக தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்" என்று அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

திருநெல்வேலியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக போட்டியிடுகிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தமட்டிலும், அது ஏற்கெனவே தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி. இப்போது பாஜக கட்சி மேலிடம் என்ன முடிவு செய்துள்ளனர் என்பது குறித்து சொல்ல முடியாது. இத்தேர்தலில் யார் நிற்க போகிறார்கள் என்பது குறித்து இரண்டு கட்சிகளின் தலைமையும் பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம்.

இந்த தொகுதியைப் பொறுத்தவரை, ஏற்கெனவே நடந்த தேர்தலில் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதி. எனவே, நிச்சயமாக வெற்றி வாய்ப்பு வரும் என்று நம்புகிறோம். கூட்டணி என்று வரும்போது, பாஜக இணைந்து செயல்படும்.

இந்தத் தேர்தல் தொடர்பாக அதிமுக பேச்சுவார்த்தை நடத்துவது ஒருபக்கம் இருந்தால்கூட, யார் நிற்கிறார்கள் என்பது முக்கியமல்ல. தேர்தலில் வேலை செய்ய வேண்டும். இதற்காகத்தான் 14 பேர் கொண்ட குழுவை பாஜக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளார். அது வேலைக்கான பணிக்குழு" என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளை கவனிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் பாஜக குழு அமைத்துள்ளது. இக்குழுவில், ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வி.சி.வேதானந்தம், மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் என்.பி.பழனிசாமி, மாவட்ட பார்வையாளர் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் எஸ்.எம்.செந்தில், சிவகாமி மகேஸ்வரன், மகளிரணித் தலைவர் புனிதம் ஐயப்பன் மாநில செயற்குழு உறுப்பினர் பொன். ராஜேஷ்குமார், மாவட்ட செயலாளர்கள் ஜி.விவேகானந்தன், விஸ்வா பாலாஜி, எஸ்.சி. அணி மாநில பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி, ஓபிசி அணி மாநில துணைத்தலைவர்கள் டி.தங்கராஜ், ஆற்றல் அசோக்குமார், ஐடி பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவர் டி.ரஞ்சித் ஆகிய 14 பேர் மாநிலக்குழுவில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கடந்த ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மூன்று மாநில தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதோடு சேர்த்து ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஈரோட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும், திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளின் சார்பில் இடைத்தேர்தல் குறித்து ஆலோசித்து வரும் நிலையில், இடைத்தேர்தல் பணிக்காக 14 நிர்வாகிகள் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x