Published : 19 Jan 2023 06:36 AM
Last Updated : 19 Jan 2023 06:36 AM

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டி? - டெல்லியில் அமித் ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலையை களமிறக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் டெல்லி சென்றார். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, அரை மணி நேரம் பேசியதாகக் கூறப்படுகிறது.

ஆளுநர் விவகாரம்: அப்போது, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு, போதைப்பொருள் நடமாட்டம் குறித்து விளக்கியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது நடந்த நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்த அண்ணாமலை, ஆளுநருக்கு எதிராகத் திமுகவினரும், அவர்களின் கூட்டணிக் கட்சியினரும் கருத்துகளை தெரிவித்து வருவது பற்றி விளக்கியுள்ளார்.

குறிப்பாக, திமுக பேச்சாளர், ஆளுநரை ஒருமையிலும், கொலை மிரட்டல் விடுக்கும்படியாகவும் பேசியது, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆளுநர் மாளிகை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்தும் ஆதங்கத்துடன் அண்ணாமலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், தமிழக அமைச்சர்கள் சிலரின் ஊழல்கள், தமிழகத்தில் தான் மேற்கொள்ளவுள்ள பாதயாத்திரை திட்டம் குறித்தும் விளக்கியுள்ளார். அனைத்தையும் கேட்டுக் கொண்ட அமித் ஷா, தமிழகத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவியே நீடிப்பார் என்ற உறுதியை அண்ணாமலையிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பாஜக நிர்வாகிகள் தீவிரம்: முக்கியமாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இருவரும் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர். அத்தொகுதியில் அண்ணாமலையை நிறுத்தி வெற்றிபெறச் செய்து தமிழக சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டுமென மூத்த நிர்வாகிகள் தன்னிடம் தெரிவித்ததாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.27-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கட்சி தலைமை தெரிவித்தால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2021 தேர்தலில், அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தமாகா வேட்பாளர் யுவராஜ் 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

தற்போதைய சூழ்நிலையில் அதிமுக - தமாகா இடையே சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை தீவிரமடைந்துள்ளதால், தேர்தலை சந்திக்கும் நிலையில் அக்கட்சி இல்லை. அதனால், ஈரோடு கிழக்கு தொகுதியைப் பெற்று அண்ணாமலையை வேட்பாளராக நிறுத்த பாஜகவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக அதிமுக தலைமையிடம் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அண்ணாமலை, டெல்லியில் இருந்து சென்னை வராமல் கடலூரில் இன்று நடைபெறவுள்ள கட்சியின் கூட்டத்துக்கு செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x