

இந்திய அளவில் ஆயிரக்கணக் கான பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்தன. காலப்போக்கில் அவை குறையத் தொடங்கி, காணக் கிடைப் பதே ஆச்சரியம் என்னும் நிலை வந்துவிட்டது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் 219 பாரம்பரிய நெல் ரகங்கள் விதை நெல் தேவைக்காக இயற்கை ஆர்வலர்களால் பயிரிடப் பட்டுள்ளன.
உயர் விளைச்சல் ரகங்கள் புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், விவசாயிகளின் ஆதார மாக இருந்த பாரம்பரிய நெல் ரகங்கள் குறையத் தொடங்கின. இயற்கை ஆர்வலர்கள் இதை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதுதான், விதை நெல் கிடைப் பதிலேயே சிரமம் இருந்தது தெரியவந்தது. அதன் பின்னர் பாரம்பரிய நெல் ரகங்களைச் சாகுபடி செய்யவும், அதன் மருத் துவத் தன்மையை விளக்கியும் பல அமைப்பினராலும் தொடர் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ‘கிரியேட்’ என் னும் நுகர்வோர் அமைப்பு மூலம் இந்தியா முழுவதும் உள்ள இயற்கை ஆர்வலர்களின் பங்கேற் புடன் கேரள மாநிலம் வயநாடு அருகில் உள்ள பனவல்லி கிராமத் தில் ஒன்றரை ஏக்கர் பரப்பில் விதை நெல் தேவைக்காக, இயற்கை விவசாயத்தில் 219 பாரம்பரிய நெல் ரகங்களைச் சாகுபடி செய் துள்ளனர். இவை, இம்மாத இறுதி யில் அறுவடை செய்யப்பட உள் ளன.
இதுகுறித்து, ‘கிரியேட்’ அமைப் பின் அறங்காவலர் நாகர்கோவில் பொன்னம்பலம் கூறியதாவது:
இந்த முயற்சிக்கான விதையை விதைத்தவர் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். அவரது வழிகாட்டுதலோடு 2006-ம் ஆண்டு ‘நமது நெல்லை காப்போம்’ இயக்கத்தை ஏற்படுத்தினோம். இந்தியா முழுவதும் உள்ள விவசாய அமைப்புகளோடு சேர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் 1,009 பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி மீட்டெடுத்தோம். அவை இப்போது விவசாயிகளால் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.
விவசாயிகளுக்கு, அந்தந்த சூழலுக்கு ஏற்றவாறு நன்கு விளைச்சலைத் தரக்கூடிய 219 ரகங்களைத் தேர்வு செய்து, கேர ளாவில் இப்போது விதை நெல் தேவைக்காக பயிர் செய்துள்ளோம். அறுவடை முடிந்ததும் ஒரு விவ சாயிக்கு இரண்டு கிலோ வீதம் விதை தேவைக்காக இலவசமாக விநியோகிக்கப்படும்.
அதை அவர்கள் பயிரிட்டு அடுத்த ஆண்டு 4 கிலோ விதை நெல் தர வேண்டும். அதை வேறு விவசாயிகளுக்கு இலவசமாக கொடுப்போம்.
ஒன்றரை ஏக்கரில் 219 ரகங் களையும் அதிகபட்சமாக 8 அடி நீள, அகல பரப்பில் நட்டுள்ளோம். இதில் நீண்ட, மத்திய, குறுகிய கால பயிர்கள் உள்ளன. ஆனால் ஒரே நேரத்தில் அறுவடையாகும்படியே நடவு செய்துள்ளோம்.
விவசாயிகளிடம் இன்று இல்லா மல் போன, பாரம்பரிய நெல் வகையை மீட்கவே இந்த முயற்சி. கேரளாவில் தணல் என்னும் இயற்கை விவசாய அமைப்பு இந்த விவசாய நிலத்தைப் பார்த்துக்கொள்கின்றனர்.
‘நமது நெல்லை காப்போம்’ அமைப்பின் மூலம் கர்நாடகா, ஒடிஷா, மேற்கு வங்கம்., ஜார் கண்ட் மாநிலங்களிலும் இதேபோல் விதை நெல் உற்பத்தி செய்ய இருக்கிறோம். தமிழகத்தில் 157 ரகங் களை மீட்டு, இதுவரை 30 ஆயிரம் பேருக்குக் கொடுத்துள்ளோம் என்றார்.