

புதுச்சேரி மீன்பிடி துறைமுகம் 4 மாதங்களாக தூர்வாராததற்கும் மீனவர்களின் பல கோடி இழப்புக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியே காரணம் என்று அமைச்சர் கந்தசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் தூர்ந்ததால் மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதையடுத்து விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இதனை அடுத்து புதுச்சேரி அரசுக்கு சொந்தமான மணல் வாரும் கப்பல் மூலம் முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணி ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடந்த மாதம் 22-ம் தேதி மணல் வாரும் கப்பல் பழுதானதால் ஆழப்படுத்தும் பணி நின்றது. பின்னர் அந்த இயந்திரம் பழுது பார்த்து மீண்டும் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் முகத்துவாரம் தூர்ந்ததன் காரணமாக தொழிலுக்குச் செல்லாததால் பல கோடிகள் இழப்பு ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து துறைமுகப் பொறுப்பை வகித்துவரும் அமைச்சர் கந்தசாமி தூர்வாரும் பணியை இன்று பார்வையிட்டார்.
ஆய்வுக்குப்பின்னர் அமைச்சர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி துறைமுகத்தை ஆளுநர் கிரண்பேடி சென்று பார்வையிட்டார். அப்போது மத்திய நிறுவனத்தின் மூலம்தான் மணல் அள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். இதனால்தான் 4 மாதம் காலதாமதம் ஏற்பட்டது. மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டு, ரூ.25 கோடி அளவுக்கு தொழில் பாதிப்பு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பான கோப்புகளும் தயார் செய்து அனுப்பப்பட்டது. மத்திய அரசின் மூலம் தூர்வாரும் பணி ஒருவாரத்தில் தொடங்கும் என்று கூறியுள்ளனர். விரைவில் தூர்வார வேண்டும். கடந்த 4 மாதங்களாக தூர்வாராததற்கு ஆளுநர் கிரண்பேடிதான் காரணம்.
தூர்வாரும் பணியால் மீனவர்களுக்கு இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள ரூ.25 கோடி இழப்பை ஈடுகட்டுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரூ.500, ரூ.1000 பணமதிப்பு நீக்கத்தால் முதியோர் பென்ஷன் போடமுடியவில்லை. ஒரு மாத காலமாக இறந்தவர்களுக்கான நிதி தரமுடியவில்லை. அரசிடம் பணம் இருந்தும் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.2000 கோடியை ஆளுநர் பெற்றுத்தர வேண்டும்.
மக்களால் தேர்வு செய்யப்பட்டஎம்எல்ஏக்கள், அமைச்சர்களை கலந்து பேசி செயல்படுவதுதான் ஜனநாயக முறை. வம்பாகீரப்பாளையம் கடற்கரைச்சாலைக்கு ஆளுநரே தன்னிச்சையாக பெயர் வைத்தார். அது தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும், துறை அமைச்சருக்கும் தெரியாது. எம்எல்ஏக்கள் கருத்தையும் கேட்டு ஆளுநர் செயல்பட்டால் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் சிறப்பாக கொண்டு செல்ல முடியும். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் அனைவருடனும் ஆளுநர் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என் பணிவான வேண்டுகோள்'' என்று அமைச்சர் கந்தசாமி குறிப்பிட்டார்.