பிரதமரின் தேர்வும், தெளிவும் கலந்துரையாடல்: தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்களை கேட்க வைக்க பாஜக ஏற்பாடு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மதுரை: பிரதமர் மோடியின் ‘தேர்வும், தெளிவும்’ கலந்துரையாடல் நிகழ்வை தமிழகத்தில் ஆயிரம் மண்டல்களில் 10 லட்சம் மாணவர்களைக் கேட்க வைக்க பாஜக சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தேர்வு நேரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும், பயத்தையும் போக்கி துணிவுடன் தேர்வை எதிர்கொள்ளும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி 2018-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ‘தேர்வும் தெளிவும்’ என்ற பெயரில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். இந்தாண்டு ஜன. 27-ல் ‘தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

இந்தாண்டு பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்வை தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் நேரடி ஒளிபரப்புச் செய்ய தமிழக பாஜக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஜன. 20-ம் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாஜக சார்பில் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது.

இப்போட்டியில் வெற்றிபெறுபவர்கள் ஜன. 27-ல் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கேற்கச் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இப்பணிக்காக பாஜகவில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.என்.எஸ்.பிரசாத் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்வும், தெளிவும் நிகழ்வு குறித்து பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட பார்வையாளர்கள், தலைவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன் ஆகியோர் குரல் பதிவு வழியாக ஆலோசனை வழங்கினர்.

அப்போது அண்ணாமலை பேசியதாவது: பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்வை தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளையும் கேட்க வைக்க வேண்டும். இது ஒரு அரசியல் கலப்பு இல்லாத நிகழ்வு. மாணவர்களைத் தேர்வுக்குப் பயமில்லாமல் தயார்படுத்தும் நிகழ்வு. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தது 500 மாணவ, மாணவிகள் பங்கேற்க வேண்டும்.

இதற்கான பணியை வேகப்படுத்த வேண்டும். அனைத்துப் பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி நிகழ்வை தெரியப்படுத்த வேண்டும். தேர்வும், தெளிவும் நிகழ்வை மிகப்பெரிய அளவில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக ஏ.என்.எஸ்.பிரசாத் பேசுகையில், தேர்வும், தெளிவும் தொடர்பான பிரதமரின் பேச்சை ஆயிரம் மண்டல்களில் பத்து லட்சம் மாணவர்களை கேட்க வைக்க வேண்டும். இதில் பங்கேற்க தனியார் பள்ளிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக தனியார் பள்ளிகளில் 10-க்கும் மேற்பட்ட சங்கப் பிரதிநிதிகளுடன் பேசியுள்ளோம். பாஜக நிர்வாகிகளின் மகன், மகள் பயிலும் பள்ளிகளிலும் தேர்வும், தெளிவும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் நூறு மாணவர்களுக்கு காணொலி காட்சி வழியாக பிரதமரின் பேச்சை ஒளிபரப்ப வேண்டும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in