

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புதிய கடைகளுக்கு ஏலம் விடப்பட்டதில் முறை கேடு நடந்ததாகக் கூறி உண்ணா விரதத்தில் ஈடுபட முயன்ற பாஜக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட 34 கடைகளுக்கு முதல் முறை யாக ஏலம் விடப்பட்டது. இதில் முறைகேடுகள் நடை பெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து ஏலம் விடாமல் கடைகள் ஒதுக்கப்பட்டதால், மீண்டும் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பாஜக கிழக்கு மாவட்டத் தலைவரும் மாநகராட்சி பாஜக கவுன்சிலருமான ஜி.தனபாலன் பேருந்து நிலைய கடைகள் முன்பு நேற்று திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஏலம் முறையாக நடைபெறாமல் கடைகள் ஒப்படைக் கப்பட்டுள்ளன, இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பலமுறை கூறியும் கண்டு கொள்ளவில்லை. இதன் மூலம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,
எனக் கூறி கடை முன்பு அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் நகர் போலீஸார் பொது இடத்தில் முன்னறிவிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவரை கைது செய்தனர்.