

விருதுநகர்: மதிப்பெண் சான்றிதழ் வழங்க ரூ.2,500 கேட்பதாக அருப்புக் கோட்டையில் பாலியல் குற்றச்சாட்டில் மூடப்பட்ட கல்லூரி நிர்வாகம் மீது மாணவ, மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
அருப்புக்கோட்டையில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி இயங்கி வந்தது. இங்கு பயின்ற மாணவிகள் சிலருக்கு கல்லூரித் தாளாளர் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் கூறப்பட்டதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். அதோடு, கல்லூரி மூடப்பட்டு, அங்கு பயின்ற மாணவ, மாணவிகள் மற்ற கல்லூரிகளில் சேர்ந்து படிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டுக் கான மதிப்பெண் சான்றிதழை வழங்க கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் தலா ரூ.2,500 கேட்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள் ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டியிடம் நேற்று புகார் மனு அளித்தனர். அதில், நாங்கள் தற்போது வேறு கல்லூரிகளில் பயின்று வருகிறோம்.
இந்நிலையில், கடந்த ஆண்டு தேர்வு எழுதிய மதிப்பெண் சான்றிதழ் தற்போது எங்களுக்குத் தேவைப்படுகிறது. ஆனால், கல்லூரித் தாளாளர் எங்களிடம் மதிப்பெண் சான்றிதழ் வேண்டுமானால் ரூ.2,500 தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து மாணவர்களும் கடந்த ஆண்டுக்குரிய கல்வித் தொகையை செலுத்திய பின்பும் மதிப்பெண் சான்றிதழ் பெற ரூ.2,500 செலுத்த வேண்டும் என வலியுறுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து, வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.