Published : 19 Jan 2023 04:30 AM
Last Updated : 19 Jan 2023 04:30 AM

குமரி முதல் டெல்லி வரை நீதி கேட்டு வாகனப் பேரணி: மார்ச் 1-ல் தொடங்க இருப்பதாக பி.ஆர்.பாண்டியன் தகவல்

திருச்சி: விவசாய விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலை கோரி மார்ச் 1-ம் தேதி குமரியில் தொடங்கி டெல்லி வரை வாகனப் பேரணி மேற்கொள்ள இருப்பதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு உயர்மட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அமைப்பின் தலைவர்பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500-ம், கரும்பு டன்னுக்கு ரூ.4,000-ம் வழங்கப்படும் என திமுகதேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகளாகியும் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இதேபோல, பாரம்பரிய உற்பத்தி பொருட்களுக்கான சந்தைப்படுத்துதல், தனி பருவக் கொள்முதல் போன்றவாக்குறுதிகளும் நிறைவேற்றப் படாமல் உள்ளது. இது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாக உள்ளது. மேலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த கரும்புக்கு கிரையத் தொகையைக் கூட தராமல் மோசடி செய்த திருமண்டங்குடி சர்க்கரை ஆலைநிர்வாகம் இதுவரை அரசுடைமையாக்கப்படாமல் உள்ளது.

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றபோது அறிவிக்கப்பட்ட விவசாய விளைபொருட்களுக்கு இரட்டிப்பு லாபம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, இதுதொடர்பாக பரிசீலிக்க குழு அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டு, ஓராண்டு நிறைவுற்றும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

எனவே, ஜனவரி 31-ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், விவசாய விளைபொருட்களுக்கு கட்டுபடியான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இல்லையெனில், மார்ச் 1-ம் தேதிகன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை வாகனப் பேரணி மேற்கொள்ளப்படும்.

அப்போது, செல்லும் வழியில் 12 மாநில முதல்வர்களை சந்தித்து கோரிக்கைகளுக்கு ஆதரவு கேட்க உள்ளோம். இந்தப் போராட்டத்துக்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x