

டிஎன்பிஎஸ்சியின் 11 புதிய உறுப்பினர்களின் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை திமுக, பாமக, தமாகா ஆகிய கட்சிகள் வரவேற்றுள்ளன.
இதுதொடர்பாக திமுக பொருளாளரும், தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவரு மான மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள அறிக்கை:
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில், 11 பேரின் நியமனம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில் “அதிமுக ஆதரவாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர் களை நியமனம் செய்ததில் எந்தவித வெளிப்படைத்தன்மை யும் இல்லை. இது போன்ற நியமனங்களில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டல் எதை யும் பின்பற்றவில்லை” என்று சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத் தக்கது.
இத்தீர்ப்பு எண்ணற்ற இளைஞர் களுக்கு தேர்வாணையத்தின் மீது மிகப்பெரும் நம்பிக்கையை அளித்திருக்கிறது. இனியாவது அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனத்தில் வெளிப்படை தன்மையையும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு தலையும் தவறாமல் கடைப் பிடிக்க வேண்டும் எனவும், சிறந்த நிர்வாக திறன் படைத்த நேர்மையாளர்களை அரசு பணியாளர் தேர்வாணைய உறுப் பினர்களாக நியமித்து அரசு பணியாளர் தேர்வாணையத்தை அரசியல் பிடியிலிருந்து முற்றிலும் விடுவிக்க வேண்டும் எனவும் அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:
டிஎன்பிஎஸ்சி-க்கு 11 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது செல்லாது என்று கூறி அவர் களின் நியமனத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன்மூலம் டிஎன்பிஎஸ்சி-யின் மாண்பும், கவுரவமும் காப்பாற் றப்பட்டுள்ளன. இந்த 11 பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டபோதே பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆளுங்கட்சி வழக்க றிஞர்களையும், ஊழலுக்கு உதவிய அதிகாரிகளையும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமிக்கும் போக்கை கைவிட்டு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் சமூக ஆர் வலர்கள் அடங்கிய குழுவை அமைத்து அதன் பரிந்துரைப்படி உறுப்பினர்களை நியமிக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் வருங்காலத்தில் தகுதி யுள்ளவர்கள் மட்டுமே உறுப் பினர்களாக நியமிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும். டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் நியமனங்களில் அரசி யல் சாயம் இருக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.