Published : 18 Jan 2023 09:01 PM
Last Updated : 18 Jan 2023 09:01 PM

‘குழந்தைகளிடம் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்ய சொன்ன ஆசிரியர்கள்’ - கோவில்பட்டி அருகே பெற்றோர்கள் போராட்டம்

கோவில்பட்டி அருகே பள்ளியின் கழிவறையை மாணவர்களை சுத்தம் செய்ய சொல்வதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே பள்ளியில் கழிவறையை குழந்தைகளைக் கொண்டு சுத்தம் செய்ய சொன்னதாகக் கூறி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி அருகே கிழவிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பள்ளியில் 14 மாணவர்கள், 16 மாணவிகள் என மொத்தம் 30 பேர் படிக்கின்றனர். பள்ளியில் தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால், கழிவறை மற்றும் வளாகம், வகுப்பறைகளை மாணவ, மாணவிகளே துப்புரவு செய்து வருவதாக பெற்றோர் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், இன்று (ஜன.18) காலை பள்ளிக்கு குழந்தைகளுடன் வந்த பெற்றோர் நுழைவாயிலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கு வந்த ஆசிரியர்களையும் அனுமதிக்கவில்லை. தகவல் அறிந்து அங்கு வந்த நாலாட்டின்புதூர் காவல் உதவி ஆய்வாளர் ஆர்தர் அகஸ்டின் மற்றும் போலீஸார் பெற்றோருடன் பேசி ஆசிரியர்களை பள்ளிக்கு அனுப்பினர். ஆனாலும், பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கிழவிபட்டி ஊராட்சி தலைவர் வள்ளி, துணை தலைவர் பார்த்திபன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னராசு மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்

இதையடுத்து வட்டாட்சியர் சுசீலா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னராசு, வட்டார கல்வி அலுவலர் பத்மாவதி மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதில், ‘ஆசிரியர்கள் கழிவறைக்கு செல்லும் முன் தண்ணீர் எடுத்துக் கொண்டு போய் வைக்க சொல்வார்கள். அதேபோல், கழிவறையையும் சுத்தம் செய்ய கூறுவார்கள். எங்களை அவதூறாக பேசுவார்கள். அவர்களது பிள்ளைகளுக்கு பிரஜெக்ட் செய்ய எங்களை பொருட்கள் எடுத்து வர கூறுவார்கள்’ என்றனர்.

பின்னர் ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதில், ‘நாங்கள் கோரிக்கை விடுத்தும் தூய்மைப் பணியாளர் வரவில்லை’ என ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது. அப்போது அங்கிருந்து பெற்றோர் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர், கிராம சபை கூட்டங்களில் ஆசிரியர்கள் பங்கெடுத்து, பள்ளி வளர்ச்சி தேவையானவற்றை கூறியிருக்கலாம். ஆனால், இதுவரை இவர்கள் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டதில்லை என்றனர்.

அதற்கு தலைமை ஆசிரியை நீலா ஜெயலட்சுமி, கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன் என தெரிவித்தார். அப்படியென்றால், அதில் கொண்டதற்கான கையெழுத்திட்டுள்ளீர்களா? என பெற்றோர் கேள்வி எழுப்பினர். மேலும், கிழவிபட்டி தனி ஊராட்சியாகும். இங்குள்ள 39 குழந்தைகள் அருகே உள்ள துரைசாமிபுரம் அரசு பள்ளிக்கு செல்கின்றனர். வசதியானவர்கள் சிபிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில் சேர்த்துள்ளனர் என்றாலும் பரவாயில்லை. ஆனால், இங்குள்ள அனைத்து மக்களும் கூலித்தொழிலாளிகள் தான். இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களின் செயல்பாடுகளில் திருப்தியில்லாமல் அவர்கள் அருகே உள்ள அரசு பள்ளிக்கு தங்களது குழந்தைகள் சேர்த்துள்ளனர் என்றும் பெற்றோர் தெரிவித்தனர்.

தொடர்ந்து, தலைமை ஆசிரியை நீலா ஜெயலட்சுமியை இடமாற்றம் செய்ய வேண்டும். அதுவரை குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என பெற்றோர் உறுதியாக கூறினர். இதைத் தொடர்ந்து, அவரை பணியிடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பிற்பகல் முதல் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x