Published : 18 Jan 2023 06:20 AM
Last Updated : 18 Jan 2023 06:20 AM
திருப்பத்தூர் / புதுக்கோட்டை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று வீர விளையாட்டு போட்டிகள் களைகட்டின. திருப்பத்தூர் அருகே உள்ள சிராவயலில் நடைபெற்ற மஞ்சு விரட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் விபத்தில் 2 காளைகள் உயிரிழந்தன.
சிராவயல் மஞ்சுவிரட்டை யொட்டி அக்கிராமத்தில் பெரிய நாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் நேற்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கிராம மக்கள் மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவுக்கு வந்தனர். தொழுவில் இருந்த மாடுகளுக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் மாடு பிடி வீரர்கள் மஞ்சுவிரட்டு உறுதிமொழி எடுத்துகொண்டனர். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மஞ்சுவிரட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. தொழுவில் இருந்து 280 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 120 மாடு பிடிவீரர்கள் பங்கற்றனர். மாடுகளைப் பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளிக் காசு, பீரோ, கட்டில், அண்டா, குத்து விளக்கு, மிக்ஸி, மின்சார அடுப்பு, பட்டுச் சேலை ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டன.
முன்னதாக சிராவயல் பொட்டல், கம்பனூர் பரணி கண்மாய், கும்மங்குடி பொட்டல் ஆகிய இடங்களில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், அறந்தாங்கி திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
பார்வையாளர் உயிரிழப்பு: மாடு முட்டியதில் மதுரை மாவட்டம் சுக்காம்பட்டியைச் சேர்ந்த பூமிநாதன்(52) உயிரிழந்தார். மேலும் பல்வேறு மாடுகள் முட்டியதில் 131 பேர் காயமடைந்தனர்.
திருப்பத்தூர் சமத்துவபுரம் அருகே பேருந்து மோதியதில் மஞ்சுவிரட்டில் அவிழ்த்துவிடப்பட்ட காளை ஒன்று உயிரிழந்தது. அதேபோல் நாச்சியாபுரம் அருகே கிணற்றில் விழுந்து ஒரு காளை உயிரிழந்தது.
ஒருவர் உயிரிழப்பு: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கே.ராயவரம் நொண்டியய்யா கோயில் திடலில் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 218 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில், நாலாபுறமும் சிதறி ஓடிய காளைகளில் ஒன்று முட்டியதில், மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் புதுவயலைச் சேர்ந்த கணேசன்(50) உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT