Published : 18 Jan 2023 04:27 AM
Last Updated : 18 Jan 2023 04:27 AM
தென்காசி: பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே கரும்புகள் விற்பனை களைகட்டத் தொடங்கியது. தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தென்காசி மாவட்டத்துக்கு கரும்புகள் விற்பனைக்கு லாரிகளில் கொண்டுவந்து குவிக்கப்பட்டன.
பொங்கலுக்கு முந்தைய நாளில் கரும்புகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒரு கரும்பு 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனையானது. நகர்ப்பகுதிகள் முதல் கிராமப்புறங்கள் வரை சாலையோரங்களில் ஏராளமான வியாபாரிகள் கட்டுக்கட்டாக கரும்புகளை கொண்டுவந்து குவித்து வைத்து வியாபாரம் செய்தனர்.
கரும்பு வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் பொங்கல் முடிந்ததும் கரும்பு வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் விற்பனையாகாத கரும்புகளை வியாபாரிகள் தொடர்ந்து சாலையோரங்களில் குவித்து வைத்துள்ளனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, “கரும்புகள் அதன் தரத்துக்கேற்ப 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பெரும்பாலான மக்கள் பேரம் பேசாமல் சொன்ன விலைக்கு கரும்புகளை வாங்கிச் சென்றனர். வாங்கி வந்த கரும்புகளில் பெரும்பாலானவை விற்பனையாகிவிட்டதால் லாபம் கிடைத்தது.
பொங்கலுக்கு முன்தினம் வரை வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. பொங்கல் நாளில் இருந்து வியாபாரம் முற்றிலும் முடங்கிவிட்டது. ஏராளமான கரும்புகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. ஒரு கரும்பு 10 ரூபாய்கு விற்பனை செய்யவும் தயாராக உள்ளோம். ஆனால் பொங்கல் முடிந்ததும் கரும்பு வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
முன் காலத்தில் ஒரு நபர் குறைந்தபட்சம் 2 முழு கரும்புகளை கடித்து சுவைத்து உண்டுவிடுவார்கள். ஆனால் இப்போது கரும்புகளை சுவைப்பதிலும் மக்களுக்கு ஆர்வம் இல்லை. பெரும்பாலான மக்கள் கொண்டாட்டத்துக்காகவே கரும்புகள் வாங்குகின்றனர். எனவே பொங்கல் முடிந்ததும் கரும்புகளை வாங்க ஆள் இல்லை.
விற்பனையாகாத கரும்புகளை கரும்புச்சாறு வியாபாரிகள் சிலர் குறைந்த விலைக்கு வாங்கிச் சென்றனர். அதன் பிறகும் கரும்புகள் மீதமாகி விட்டன. கேட்ட விலைக்கு கொடுத்து இருப்பை காலி செய்யலாம் என்று கருதினாலும் யாரும் கரும்பை கேட்கவில்லை. சில நாட்கள் வெயிலில் இருந்தால் இந்த கரும்புகள் எதற்கும் உதவாது. குப்பையில்தான் போட வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT