Published : 18 Jan 2023 04:30 AM
Last Updated : 18 Jan 2023 04:30 AM
கோவில்பட்டி: வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 403 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான கிராமங்களில் விவசாயம் பிரதானமாக நடைபெறுகிறது. மானாவாரி விவசாயிகள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் போது விவசாயப் பணிகளை மேற்கொள்வார்கள். சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துகள், தென்பகுதியில் நெல், வாழை பிரதானமாக பயிரிடப்படுகிறது.
ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடை வளர்ப்பு, பனைத் தொழிலும் நடைபெறுகிறது. கிராமங்களில் உள்ள ஊருணிகள், கண்மாய், குட்டைகள் முறையாக தூர்வாரப்படாததால் மண்மேடாக காட்சியளிக்கின்றன. அந்தந்த உள்ளாட்சி சார்பில் பொதுமக்கள், கால்நடைகளின் தேவைக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், இந்தாண்டு பருவமழை இயல்பைவிட மிகக்குறைவாக பெய்துள்ளதால் மகசூல் கடுமையாக பாதித்துவிட்டது. குளம், குட்டை, ஊருணிகளில் போதிய அளவு தண்ணீர் நிரம்பாமல் வறண்டுள்ளன. கால்நடைகளின் தேவைக்கான குடிநீருக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் அதள பாதாளத்துக்கு போய்விட்டது.
தற்போது பனிக்காலத்தில் பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. இதனால் கோடையில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். எனவே, கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி ஆதாரத்தை அளித்து, மக்களையும், கால்நடைகளையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT