

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - மாடுபிடி வீரர் அபி சித்தர் முதலிடம்: ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்து முடிந்தநிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் 10 சுற்றுகளாக நடந்து முடிந்தது. 820 மாடுகள் களமிறக்கப்பட்ட நிலையில், 304 வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் 26 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அபி சித்தர் முதலிடம் பிடித்தார். 20 காளைகளை அடக்கிய அஜய் இரண்டாவது இடத்தையும், 12 காளைகளை அடக்கிய ரஞ்சித் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அபி சித்தர் மற்றும், முதலிடம் பிடித்த காளையின் உரிமையாளர் புதுக்கோட்டை தமிழ்செல்வன் ஆகியோருக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான கரும் பசுமாடு ஒன்றும் வழங்கப்பட்டது. இதேபோல் இரண்டாம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் மற்றும் காளை உரிமையாளருக்கு ஹோன்டா ஷைன் பைக்கும், மூன்றாம் இடம்பிடித்த காளையின் உரிமையாளருக்கு ஸ்கூட்டியும் பரிசாக வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 50-க்கும் மேற்பட்டோர் காயம்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில், 53 பேர் காயமடைந்த நிலையில், 10 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காணும் பொங்கல் கொண்டாட்டம்: சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்: காணும் பொங்கலை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்தனர். சென்னையில் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குறிப்பாக, வண்டலூர் உயிரியல் பூங்காவின் காலை 8 மணி முதலே மக்கள் குவிந்தனர். இதனால், 20 டிக்கெட் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. பார்வையாளர்களை சோதனையிடும் வரிசைகளும் 10 ஆக உயர்த்தப்பட்டிருந்தது.
வேங்கைவயல் சமத்துவப் பொங்கல் விழாவில் சலசலப்பு: “புதுக்கோட்டை மாவட்டத்தில் இரட்டைக் குவளை முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆனால், அவ்வாறு இருப்பதாக கிளப்பிவிடப்படுகிறது” என சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட வேங்கைவயலில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. விழாவில், மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனிடையே, 'இங்கு வந்த அமைச்சர்கள் ஒரு தரப்பினரை மட்டுமே பார்த்து பேசி விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர். மற்றொரு தரப்பினரை பார்க்கவோ, பேசவோ செய்யவில்லை. மேலும், அய்யனார் கோயில் வழிபாட்டுக்கு எங்களையும் அழைக்கவில்லை. இவ்வாறு பாரபட்சத்தோடு நடத்தப்படுகிறது' என குற்றம்சாட்டிய பெண்கள், அங்கிருந்த இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி மற்றும் போலீஸாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியின் ‘போகி’ முயற்சிக்கு பலன்!: போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து 200 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள், சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களால் பெறப்பட்டு இன்சினரேட்டர் ஆலையில் எரியூட்டப்பட்டுள்ளது. இந்த ஆலையில் பொருட்களை எரியூட்டுவதால் புகை வெளியே வராது. சாம்பாலாக மட்டுமே கிடைக்கும். அந்த சாம்பலும் பேவர் பிளாக் கற்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும்.
சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சியால், போகிப் பண்டிகையன்று சென்னையில் காற்று தரக் குறியீடு 14 மண்டலங்களில் மிதமான அளவிலும், ஒரு மண்டலத்தில் மோசமான அளவிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் சந்திக்க திட்டம் - சசிகலா: ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை விரைவில் சந்திக்கும் திட்டம் உள்ளதாக சசிகலா தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில், எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து, திமுகவை வீழ்த்தி, அதை எம்ஜிஆரிடம் சமர்ப்பிப்போம். அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். எங்கள் கட்சிக்காரரை சந்திப்பதற்கு, எனக்கு என்ன பயம்? விரைவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் திட்டம் உள்ளது" என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், "அதிமுகவில் மூக்கை நுழைக்காதீர்கள். அதிமுகவைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் ஒன்றரை கோடி தொண்டர்கள் ஒருமித்தக் கருத்தோடு இருக்கும்போது, சசிகலா கூறியிருப்பதை தேவையில்லை என்றுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் கருதுவான்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
“நீங்கள் என் தலைமையாசிரியர் இல்லை” - கேஜ்ரிவால் ஆவேசம்: டெல்லி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பின்லாந்து சென்று பயிற்சி பெறும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் டெல்லி சட்டப்பேரவையில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசினார். அப்போது அவர், யார் இந்த துணைநிலை ஆளுநர்? அவர் நம் தலை மீது அமர்ந்துகொண்டு இருக்கிறார். நமது குழந்தைகள் எவ்வாறு படிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு இவர் யார்? இவர்கள் நமது குழந்தைகளை படிக்க விடாமல் செய்துள்ளனர். நம்மைத் தடுப்பதற்கு துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.
என்னுடைய ஆசிரியர்கள் கூட எனது வீட்டுப் பாடங்களை, துணைநிலை ஆளுநர் பார்ப்பது போல சரிபார்த்ததில்லை. இவர் எனது கையெழுத்து, எழுத்துப் பிழை ஆகியவை குறித்து குற்றம் சுமத்துகிறார். இவர் என்னுடைய தலைமையாசிரியர் இல்லை. நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்று ஆவேசமாக பேசினார்.
“என்னால் ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்ல முடியாது”-ராகுல் காந்தி: பஞ்சாபின் ஹோஷியார்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க வருண் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்று கேட்கிறீர்கள். வருண் காந்தி பாஜகவில் இருக்கிறார். அவர் இங்கு வந்தால் அது அவருக்கு பிரச்சினையாகிவிடும். எனது சித்தாந்தமும் அவரது சித்தாந்தமும் ஒன்று அல்ல. என்னால் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்குச் செல்ல முடியாது. செல்வதாக இருந்தால் அதற்கு முன் என் தலை வெட்டப்பட வேண்டும். அதற்குப் பிறகு எனது உடலை வேண்டுமானால் அங்கு கொண்டு செல்ல முடியும். எனது குடும்பத்திற்கென்று சித்தாந்தம் உள்ளது. வருண் காந்தி மற்றொரு சித்தாந்தத்தை பின்பற்றுபவர். அந்த சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
முன்னதாக,ஹோஷியார்பூர் தாண்டா என்ற இடத்தில் இருந்து தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரையில் கூட்டத்தில் ராகுல் காந்தியை நோக்கி ஓடிவந்த ஒருவர், திடீரென ராகுல் காந்தியை கட்டிப்பிடிக்க முயன்றார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை அப்புறப்படுத்தினர். ராகுல் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாட்டில் பல மீறல்கள் உள்ளதாக, காங்கிரஸ் குற்றம்சாட்டி அவரது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கூறிய ஒரு வாரத்திற்கு பின்னர் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
மஞ்சுவிரட்டுப் போட்டி | பார்வையாளர்கள் 2 பேர் பலி: சிவகங்கை மாவட்டம் சிராவயல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயபுரம் கிராமத்தில் நடந்த மஞ்சுவிரட்டுப் போட்டிகளில், காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் இருவர் பலியாகினர்.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் - பாகிஸ்தான் பிரதமர்: இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி சம்மதிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்திருந்தார். அல் அரேபியா என்ற தொலைக்காட்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் அளித்துள்ள நேர்காணலில் இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்த நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளித்தால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.