காசிமேடு மீன்பிடி துறைமுக சேதத்தை பார்வையிட்டது மத்திய குழு: காணாமல் போன மீனவர்கள் குடும்பம் முற்றுகை

காசிமேடு மீன்பிடி துறைமுக சேதத்தை பார்வையிட்டது மத்திய குழு: காணாமல் போன மீனவர்கள் குடும்பம் முற்றுகை
Updated on
1 min read

“வார்தா” புயலால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை மத்திய குழுவினர் நேற்று பார்வையிட்டனர். அப்போது புயலால் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினர் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

“வார்தா” புயல் சேதங்களை பார்வையிட சென்னை வந்துள்ள மத்திய குழு, 2-வது நாளாக சென்னையில் நேற்று ஆய்வு மேற்கொண்டது. அக்குழுவினர் காலை 9.45 மணிக்கு காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு வந்தனர். அக்குழுவில் அதன் தலைவரும், மத்திய உள்துறை இணைச் செயலருமான பிரவீன் வசிஷ்டா, நிதித் துறை துணை இயக்குநர் ஆர்.பி.கவுல்(டெல்லி), சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை மூத்த மண்டல இயக்குநர் ஆர்.ரோஷிணி ஆர்தர் (சென்னை), மின்சார ஆணைய துணை இயக்குநர் சுமீத் குமார் (மும்பை) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அவர்களுடன் மாநில வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் வந்திருந்தார்.

அவர்களை மீன்வளத்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வரவேற்றார். பின்னர் மத்திய குழுவை அழைத்துச் சென்று, துறைமுகத்தில் புயலால் சேதமடைந்த படகுகளை காண்பித்தும், புகைப்படங்கள் மூலமும், புயலால் அப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீனவர் சந்தித்த பிரச்சினைகள், சீரமைக்க மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். அப்போது மத்திய குழுவினர் மீனவர்கள் சிலரை அழைத்து, புயல் வீசியபோது நடந்தது குறித்து கேட்டறிந்தனர்.

அப்போது, “வார்தா” புயலால் கரை திரும்பாத மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி, காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினர், மத்திய குழுவை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்களிடம் மீன்வளத்துறை செயலர் ககன்தீப்சிங் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மத்திய குழுவினர் திருவள்ளூர் மாவட்ட பாதிப்புகளை பார்வையிடச் சென்றனர்.

முதல்வர் மறைந்ததால் அலட்சியம்

காணாமல் போன மீனவர் ஒருவரின் உறவினரான ஏழுமலை என்பவர் கூறும்போது, ‘‘கடந்த 12-ம் தேதி மீனவர்கள் காணாமல் போயினர். சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன மீனவர்களில் 3 பேரின் உடல்கள், நாகப்பட்டினம் அருகே கரை ஒதுங்கியுள்ளது.

முகங்களை மீன்கள் சிதைத்த நிலையில் இருந்தது. தற்போதுதான் எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களது உடையை பார்த்து அடையாளம் காட்டியிருக்கிறோம். மற்ற 7 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இதே பகுதியில் நாற்காலி போட்டு அமர்ந்து, பிரச்சினை தீர்ந்த பிறகே செல்வார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவர் மீனவர்களை கண்டுகொள்வதில்லை. இந்த விவகாரத்தில் அவரும், மீன்வளத்துறையும் அலட்சியமாக இருந்துவிட்டனர். விரைவாக செயல்பட்டிருந்தால், அவர்களின் உயிரை காப்பாற்றியிருக்கலாம். மற்ற 7 மீனவர்களின் நிலையை தமிழக அரசு விரைவாக அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in