Published : 17 Jan 2023 08:07 AM
Last Updated : 17 Jan 2023 08:07 AM

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்/என்.சன்னாசி

மதுரை: பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் சார்பில் காரும், சிறந்த காளைக்கு அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளை கொஞ்சமும் அச்சம் கொள்ளாமல் துணிந்து நின்று அவற்றை அடக்கும் மாடுபிடி வீரர்கள் வீரம் அசாத்தியமானது. தமிழர்களுடைய வீரத்தையும், கலாச்சாரத்தை பறைசாற்றும் இந்த ஜல்லிகட்டுப் போட்டிகளை காண உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலகம் முழுவதும் இருந்து திரள்வார்கள்.

ஒவ்வொரு முறையும் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படும் காளைகளை பிடிக்க வீரர்களை சுற்றி அமர்ந்திருக்கும் பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கரகோஷம் எழுப்பார்கள். அதனால், போட்டி ஆரம்பம் முதல் கடைசி வரை பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவமாக அமையும்.

இந்த ஆண்டிற்கான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்து முடிந்தநிலையில் உலகம் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கி உள்ளது. இந்த போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

பாதுகாப்பில் 1,500 ஆயிரம் போலீஸார்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை சட்டம் ஒழுங்கு பிரச்சனையில்லாமல் வெற்றிகரமாக நடத்துவதற்கு ஐஜி அஸ்ரா கார்க் மேற்பார்வையில் டிஐஜி பொன்னி, எஸ்பிக்கள் சிவபிரசாத் (மதுரை), பாஸ்கரன் (திண்டுக்கல்), டோங்ரே பிரவின் உமேஷ் (தேனி) ஆகியோர் தலைமையில் 1,500 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், சீருடையிலும், சாதாரண உடைகளிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டியை கண்டுகளிக்க சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிப்ட் முறையில் தனி வாகனங்கள் அலங்காநல்லூர் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்காக வாடிவாசல் அருகே பிரத்தியேக கேலரி அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், விஐபிகள் கேலரி, பார்வையாளர்கள் கேலரிகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x