

சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்பும் மக்களின் வசதிக்காக சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் இன்று மட்டும் 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த 12-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 12, 13, 14-ம் தேதிகளில் 6,183 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்து நேற்று முதல் பலரும் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதையொட்டி, சென்னைக்கு 16, 17, 18-ம் தேதிகளில் தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,334 சிறப்பு பேருந்துகளும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 4,965 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 15,599 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில், நேற்று (ஜன.16) சென்னைக்கு இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,187 சிறப்பு பேருந்துகளும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 1,525 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல, இன்று (ஜன.17) சென்னைக்கு இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,941 சிறப்பு பேருந்துகளும், மற்ற பகுதிகளில் 2,061 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறியவும், புகார்களை தெரிவிக்கவும் 9445014450, 9445014436 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 5 பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்து நிலையங்களுக்கு மக்கள் செல்ல வசதியாக, கடந்த 12, 13, 14-ம் தேதிகளில் 340 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
அதேபோல, பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக இன்றும், நாளையும் (ஜன.17, 18) மாலை, இரவு நேரங்களில் 50 இணைப்பு பேருந்துகளும், 18, 19-ம் தேதிகளில் அதிகாலை நேரங்களில் 125 இணைப்பு பேருந்துகளும் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகின்றன.