

விருத்தாசலம்: பொங்கல் விழாவை முன்னிட்டு விருத்தாசலத்தில் அமைச்சர் சி.வெ. கணேசன் அவரது வீட்டு முன்பு நேற்று சிலம்பம் ஆடினார்.
பொங்கல் விழாவை முன்னிட்டு, விருத்தாசலம் நகர திமுக செயலாளர் தண்டபாணி தலைமையில் கவுன்சிலர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் சீர்வரிசை எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ .கணேசனை அவரது இல்லத்தில் சந்தித்து, பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அப்போது அந்த ஊர்வலத்தில் சில சிறுவர்களும் பங்கேற்றனர். அவர்களில் சிலர் சிலம்பம் சுற்றிக்கொண்டு அமைச்சரின் வீட்டின் முன்பு ஆடிக் கொண்டிருந்தனர். உடனே அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்களுடன் களமிறங்கி, அவரும் சிலம்பம் ஆடினார்.
அமைச்சரின் சிலம்ப சுழற்றலைக் கண்டு உற்சாகமடைந்த நகர்மன்ற உறுப்பினர் கிருஷ்ண மூர்த்தியும் சிலம்பாட்டம் ஆட, அப்பகுதி களை கட்டியது. இதைக் கண்டு அங்கு குழுமி இருந்த திமுகவினரும் பொது மக்களும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.