ஒட்டன்சத்திரம் தொகுதி தேர்தல் வழக்கு: இந்திய தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் - நோட்டீஸ் அனுப்பியும் வராததால் உயர் நீதிமன்றம் உத்தரவு

ஒட்டன்சத்திரம் தொகுதி தேர்தல் வழக்கு: இந்திய தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் - நோட்டீஸ் அனுப்பியும் வராததால் உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக எம்எல்ஏவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நோட்டீஸ் அனுப்பியும் பதில் மனு தாக்கல் செய்யாத இந்திய தலைமை தேர்தல் ஆணையர், திண்டுக்கல் ஆட்சியர், தொகுதி தேர்தல் அதிகாரி ஆகியோர் ஜனவரி 9-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது. இதில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அர.சக்ரபாணி வெற்றிபெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது வெற்றியை எதிர்த்து ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கே.கருப்பசாமி என்ற வாக்காளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

‘‘வேட்புமனுவை அர.சக்ரபாணி சரியாக பூர்த்திசெய்யவில்லை. தன் மீது நிலுவையில் உள்ள வழக்கு விவரத்தையும் அவர் குறிப்பிடவில்லை. அரைகுறையான வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அவர் மீது கீரனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே அவர் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கவேண்டும்’’ என்று அதில் கோரியிருந்தார்.

நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு இந்த மனு கடந்த 23-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர், மாவட்ட தேர்தல் அதிகாரியான திண்டுக்கல் ஆட்சியர், ஒட்டன்சத்திரம் தொகுதி தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட கலால்வரி துறை உதவி ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸை அவர்களும் பெற்றுக்கொண்டுள்ளனர். பிறகு, மனுதாரரும் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனாலும், வழக்கு விசாரணைக்கு அவர்கள் நேரிலோ, வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகவில்லை. கடந்த ஆகஸ்ட் 11, டிசம்பர் 7, 23 ஆகிய நாட்களில் வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை.

வழக்கு விசாரணைப் பட்டியலில் தலைமை தேர்தல் ஆணையர் உட்பட 3 பேரது பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஜராகாமல் இருந்ததற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. எனவே, ஜனவரி 9-ம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்கிறேன். இந்திய தலைமை தேர்தல் ஆணையர், திண்டுக்கல் ஆட்சியர், ஒட்டன்சத்திரம் தொகுதி தேர்தல் அதிகாரி ஆகிய 3 பேரும் அன்று நேரில் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in