

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி பிறந்தவர் பி.ராமமோகன ராவ். வணிக பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்ற அவர், இங்கிலாந்து மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொருளாதாரம் முடித்து, அதன்பின் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
கடந்த 1985-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் இணைந்தார். இவரது தாய் மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ், ஆங்கிலம், இந்தியில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரிந்தவர். பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த ராமமோகன ராவ், 1987 முதல் 1992-ம் ஆண்டு வரை உதவி ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியராக பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினார்.
அதைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் 1992 முதல் 1994 வரை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இருந்தார். 1994 முதல் 1996 வரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். திமுக ஆட்சியில், குடிநீர் வழங்கல் துறை இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையாளர், காகித ஆலை நிறுவன தலைவராக பணியாற்றினார். அதன்பின், நெடுஞ்சாலைத்துறை செயலாளர், வீட்டு வசதித்துறை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், சமூக நலத்துறை செயலாளர் ஆகிய பதவிகளில் இருந்தார்.
2006 முதல் 2011 வரையான திமுக ஆட்சியில் வேளாண் துறை செயலாளராக பணியாற்றினார். திமுக, அதிமுக என இரண்டு ஆட்சியாளர்கள் மத்தியிலும் நல்ல பெயர் இருந்ததால், பெரும்பாலும் வேளாண்மை, நெடுஞ்சாலை என முக்கிய துறைகளின் செயலாளராக பணியாற்றினார்.
முதல்வரின் செயலர்
பல்வேறு துறைகளில் செயலாள ராக பணியாற்றிய ராமமோகன ராவ், கடந்த 2011 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, ஜெயலலிதா 4-வது முறையாக முதல்வராக பதவியேற்றபோது, முதல்வரின் செயலாளர் நிலை-2ல் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 5 ஆண்டுகளாக அந்தப் பதவியில் இருந்தார். அப்போது முதல்வரின் செயலர் நிலை 1-ல் ஷீலா பிரியா இருந்தார்.
வழக்கமாக முதல்வரின் செய லாளர்களுக்கு துறைகள் பிரித் தளிக்கப்படும். அந்த வகையில், பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை இவர் கவனித்து வந் துள்ளார். அந்த துறை தொடர்பான முக்கிய முடிவுகளை அமைச்சர் எடுத்தாலும், அதை செயல்படுத்த, முதல்வரின் ஒப்புதல் பெறுவது ராமமோகன ராவின் கையில்தான் இருந்தது. இது தவிர, பொதுப் பணித்துறையின் கீழ் வரும் மணல் விற்பனைக்கான ஒப்பந்தம் வழங் குதல் போன்ற பணிகளும் இவரது கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2014-ல் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். அவருக்கும் செயலராக ராமமோகன ராவ் இருந்தார்.
கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. அப்போதும் முதல்வர் ஜெயலலிதாவின் செயலாளராக தொடர்ந்தார். அப்போது முதன்மைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ், கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
தலைமைச் செயலாளர்
இந்நிலையில், முதல்வரின் செயலாளர் நிலை-1ல் இருந்த ஷீலா பிரியா ஓய்வு பெற்றதும், அந்த இடத்துக்கு ராமமோகன ராவ் வந்தார். அப்போதுதான் தலைமைச் செயலாளராக இருந்த கு.ஞானதேசிகன் ஜூன் 8-ம் தேதி திடீரென மாற்றப்பட்டு, டிட்கோ தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ராமமோகன ராவ் 44-வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார்.
காவிரி நதிநீர் தொடர்பான கூட்டங்களில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை அதிகாரி களுடன் ராமமோகன ராவும் பங் கேற்றார். கடந்த 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். அப்போது அவருடன் ராமமோகன ராவும் சென்றிருந்தார்.
இந்நிலையில்தான், நேற்று காலை திடீரென அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஓய்வுபெறும் வயது 60 ஆகும். தற்போது பி.ராமமோகன ராவுக்கு வயது 59 ஆண்டு 3 மாதம் ஆகும். இவர் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 அமைச்சர்கள் சிக்குகின்றனர்
சேகர் ரெட்டி, ராமமோகன ராவ் ஆகியோர் வருமான வரித்துறையிடம் சிக்கியதையடுத்து, இவர்களுக்கு உடந்தையாக இருந்த 8 அமைச்சர்களும், சில வங்கி அதிகாரிகளும் சிக்க உள்ளனர். எனவே, இருவருடனும் தொடர்பில் இருந்த அமைச்சர்களும், வங்கி அதிகாரிகளும் தற்போது கலக்கத்தில் உள்ளனர்.
ஆளுநருக்கு தெரியும்
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும்போது மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்திடம் முன்அனுமதி பெற வேண்டும். தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவரிடம் சோதனை நடத்தும்போது அந்த மாநில ஆளுநருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
எனவே, தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவுக்கு தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.