Published : 17 Jan 2023 04:23 AM
Last Updated : 17 Jan 2023 04:23 AM

உரிய விலை கிடைக்காததால் வயலிலேயே வெட்டாமல் விடப்பட்ட செங்கரும்புகள்: விவசாயிகள் வேதனை

திருவாரூர்/ தஞ்சாவூர்: கரும்புக்கு உரிய விலை கிடைக்காததால் மன்னார்குடி பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த செங்கரும்புகளை வெட்டாமல் வயலிலேயே விட்டுவிட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டை, மேல நாகை, கீழ நாகை, கருவாக்குறிச்சி, பேரையூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயிரிடப்பட்டிருந்தது. கரும்பு விவசாயிகளின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் கரும்பு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்து, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்தது.

மேலும், விவசாயிகளிடமிருந்து வியாபாரிகளும் கரும்பை தலா ரூ.15-க்கு வாங்கிச் சென்று விற்பனை செய்தனர். ஆனால், நிகழாண்டு மன்னார்குடி பகுதியில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருந்தால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் கரும்புகளை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் கரும்புகளை, அறுவடை செய்யாமல் விவசாயிகள் வயல்களிலேயே விட்டுவிட்டனர்.

அதேவேளை, பொங்கல் பண்டிகைக்கு ஒரு சில நாட்கள் முன்பு வரை ரூ.300 வரை விற்பனையான 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு, பின்னர் ரூ,250, ரூ.150 என தொடர்ந்து குறைந்து பொங்கலுக்கு முதல்நாள் இரவு ரூ.50-க்கு கூட வாங்க ஆள் இல்லை. இதனால், பல வியாபாரிகள் தாங்கள் விற்பனைக்காக கொண்டு வந்த கரும்பு கட்டுகளை சாலையிலேயே போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.

இதேநிலை தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இருந்தது. இதுகுறித்து சூரக்கோட்டையைச் சேர்ந்த கரும்பு வியாபாரி பூமாது (65) கூறுகையில், ‘‘ரேஷன் கடைகளில் கரும்பு கொடுத்ததாலும், கரும்பு உண்ணும் ஆர்வம் குறைந்ததாலும் கரும்பு வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

இந்தாண்டு எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. விற்காத இந்த கரும்பை இங்கேயே போட்டுச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை’’ என வேதனையுடன் தெரிவித்தார்.

இது குறித்து கரும்பு விவசாயி மேல நாகை ராமைய்யன் கூறியதாவது: முன்பெல்லாம் ஒரு வீட்டுக்கு ஒரு கட்டு கரும்பு வாங்கி சென்ற காலம் மாறி, இப்போது வெறும் 2 கரும்பு இருந்தாலே போதும் என்கின்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள். அதிலும் ஒரு கரும்பை அரசே கொடுத்து விட்டதால், விளைந்த கரும்பையே வெட்ட முடியாத அளவுக்கு செங்கரும்பின் தேவை குறைந்துவிட்டது. அடுத்த ஆண்டு வேளாண் துறை அதிகாரிகள் செங்கரும்பு சாகுபடி குறித்த வரைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x