Published : 17 Jan 2023 04:23 AM
Last Updated : 17 Jan 2023 04:23 AM

ரூ.951 கோடியில் கட்டப்பட்டு வரும் திருச்சி விமான நிலைய புதிய முனைய பணிகள் 85% நிறைவு

பிரதிநிதித்துவப் படம்

திருச்சி: ரூ.951 கோடியில் கட்டப்பட்டு வரும் திருச்சி விமானநிலைய புதிய முனைய பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிவேகமாக வளர்ச்சியடையும் விமான நிலையங்களில் மிக முக்கியமானதாக திருச்சி விளங்குகிறது. எனினும் தற்போதுள்ள பயணிகள் முனையக் கட்டிடம் ஒரே நேரத்தில் 440 பயணிகளைக் கையாளும் வகையில் 11,777 சதுர மீட்டரில் மட்டுமே அமைந்துள்ளது. எதிர்காலத்தில் திருச்சி விமான நிலையம் பெருமளவில் வளர்ச்சி பெறும் என கருதப்படுவதால், அதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஏற்படுத்த இந்திய விமானநிலைய ஆணையக் குழுமம் முடிவு செய்தது.

இதன்படி, ரூ.951 கோடியில் திருச்சி விமானநிலைய புதிய முனையம் கட்டுவதற்கான பணிகளுக்கு கடந்த 2019 பிப்.10-ம் தேதி திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியின் வாயிலாக காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

2 அடுக்குகளுடன்...: அதைத்தொடர்ந்து, 60,723 சதுர மீட்டர் பரப்பளவில், 2 அடுக்குகளைக் கொண்ட ஒருங்கிணைந்த புதிய முனையக் கட்டுமான பணிகள் உடனடியாக தொடங்கின. இதில், ஒரே சமயத்தில் 2,900 சர்வதேச பயணிகள், 600 உள்நாட்டு பயணிகளை கையாள முடியும். புறப்பாடு பகுதியில் 10 வாயில், வருகை பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

40 குடியேற்றப்பிரிவு மையங்கள், 48 செக்-இன் மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 10 இடங்களில் ஏரோ ப்ரிட்ஜ், 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள், 26 இடங்களில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர், வளாகத்தில் 1,000 கார்களை நிறுத்தும் வசதி உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘கிரிஹா-4 தரநிலை’: மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், ‘கிரிஹா-4’ தர நிலை கொண்டதாக இந்த முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. விமானநிலையத்தின் மேற்கூரையிலிருந்து சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் தற்போது கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதவிர ரூ.75 கோடி செலவில் சுமார் 42.5 மீ உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறை, ரூ.15 கோடி செலவில் தற்போதுள்ள ஓடுதளத்தை மேம்படுத்துதல், ரூ.65 கோடி செலவில் விமானநிலைய பணியாளர்கள் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினருக்கான (சிஐஎஸ்எப்) குடியிருப்புகள், ரூ.10 கோடியில் ஏப்ரான் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகள் அனைத்தையும் 2021 செப்டம்பர் மாதத்துக்குள் முடித்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர இந்திய விமானநிலைய ஆணையக் குழுமம் திட்டமிட்டிருந்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக பல மாதங்கள் கட்டுமானப் பணிகள் தடைபட்டதால் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க முடியவில்லை. எனவே, கூடுதலான பணியாளர்கள் மூலம் கடந்த சில மாதங்களாக இரவு, பகலாக புதிய முனைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் தற்போது 85 சதவீதம் நிறைவுபெற்றுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையக்குழுமம் தெரிவித்துள்ளது. அதில், திருச்சி நகரின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில், நிலையான சிறப்பம்சங்களுடன் இந்த புதிய முனையம் அமைக்கப்படுகிறது. ஆற்றல் திறன்மிக்க கட்டிடமாக இது விளங்கும் எனவும் இந்திய விமானநிலைய ஆணையக் குழுமம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருச்சி விமானநிலைய இயக்குநர் சுப்பிரமணி கூறும்போது, “மீதமுள்ள 15 சதவீத பணிகளை வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.

இ.ஜி.ஐ.எஸ் கட்டுமான நிறுவனத்தின் தலைசிறந்த பொறியாளர்கள் குழுவின் மூலம் வடிவமைக்கப்பட்டு, தற்போது ஆயிரக்கணக்கான பணியாளர்களால் கட்டப்பட்டு வரும் திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் பணிகள் நிறைவுற்ற பிறகு, இந்தியா மட்டுமல்ல, உலகின் மிக அழகான விமான நிலையங்களுள் ஒன்றாக திகழும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x