Published : 16 Jan 2023 09:49 PM
Last Updated : 16 Jan 2023 09:49 PM

பெற்றோருக்கு தெரியாமல் விளையாட வந்து பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரரான கல்லூரி மாணவர்: 23 காளைகளை பிடித்து கார் பரிசு பெற்ற சுவாரசியம்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் | படம்: நா. தங்கரத்தினம்.

மதுரை: பெற்றோருக்கு தெரியாமல் பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரராக விளையாட வந்த கல்லூரி மாணவர், 23 காளைகளை அடக்கி கார் பரிசு பெற்ற சுவாரசிய நிகழ்வு நடந்தள்ளது.

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் இன்று அலங்கநால்லூர் சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன், 23 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கிய பாலமேட்டைச் சேர்ந்த போஸ் மணி இரண்டாம் இடம் பெற்றார். இவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான முதல் பரிசுக்கு ரெங்கராஜன்புரத்தை சேர்ந்த மணிகார்த்திக் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. இவருக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது. சிறந்த இரண்டாவது காளையாக திண்டுக்கல்லைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு நாட்டின கன்றுடன் கூடிய பசு மாடு வழங்கப்பட்டது.

23 காளைகளை அடக்கிய தமிழரசன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் பிஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவர், இன்று மாடுபிடி வீரராக பாலமேடு ஜல்லிக்கட்டில் விளையாட வந்தது, அவரது பெற்றோருக்கு தெரியாதாம். போட்டியில் கார் பரிசு பெற்ற நிலையில் பெற்றோர் தன்னுடைய வீரத்தை பாராட்டுவார்கள் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘அடிப்படையிலே ஜல்லிக்கட்டு பாரம்பரியமாக நடக்கும் கிராமத்தில் பிறந்தவன் என்பதால் சிறுவயது முதலே ஜல்லிக்கட்டு போட்டிகளை அதிகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஊர்களில் சிறுவயதில் சிறு சிறு கன்றுகளை பிடிப்பது முதல் பெரியவனாகி வளர்ந்த பிறகு கட்டிப்போட்ட ஜல்லிக்கட்டு காளைகளை பிடிப்பது வரை ஜல்லிக்கட்டு போட்டியில் மிகுந்த ஆர்வமானனேன்.

ஆனால், என் பெற்றோருக்கு ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க போவதையே விரும்ப மாட்டார்கள். போட்டியில் மாடுபிடி வீரராக விளையாட செல்வதையும் அவர்கள் சுத்தமாக விரும்பவில்லை. எங்கள் நண்பர்களுக்குள் வாட்ஸ் அப் குழுக்கள் வைத்துள்ளோம். அந்த குழுக்கள் சார்பில் போடப்படும் ஜல்லிக்கட்டு வீடியோக்களில் சிறந்த ஜல்லிக்கட்டு காளைகளை மாடுபிடி வீரர்கள் எப்படி அடக்குகிறார்கள் என்பதை பார்ப்பேன். பிறகு ஜல்லிக்கட்டு காளைகளை நண்பர்களுடன் சென்று பிடிக்க பழகினேன்.

கடந்த முறை இதே பாலமேட்டில் பங்கேற்று 9 காளைகளை அடக்கினேன். அதற்கே வீட்டில் சத்தம் போட்டார்கள். சிறந்த மாடுபிடி வீரராகி கார் பரிசு பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்காக இருந்தது. இந்த முறையுமு் பெற்றோருக்கு தெரியாமல் போட்டியில் பங்கேற்க வந்தேன். 23 காளைகளை அடக்கி கார் பரிசு பெற்றது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாகவும், பெருமையாகவும் கருதுகிறேன். இந்த கார் பரிசை என்னை உற்சாகப்படுத்தி வந்த என் நண்பர்களுக்கு அர்பணிக்கிறேன். காளைகளை அடக்குவது சாதாரண விஷயமில்லை. கிட்டத்தட்ட உயிரை பனையம் வைத்துதான் காளைகளை நெருங்கி செல்ல வேண்டி இருக்கிறது. அதனால், இந்த போட்டியில் சிறந்த வீரராக தேர்வாகும் என்னை போன்ற இளைஞர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும்’’ என்றார்.

சிறந்த காளை உரிமையாளர் பரிசு பெற்ற டைல்ஸ் கடை தொழிலாளியும், காளை உரிமையாளருமான மணி கார்த்திக் கூறுகையில், ‘‘டைல்ஸ் கடையில் வேலை பார்க்கிறேன். பெரிய பொருளாதார பின்னணி இல்லை. ஜல்லிக்கட்டு மீதான ஆர்வத்தில் காளை வளர்க்கிறேன். அன்றாடம் வேலைக்கு சென்றுவிட்டு காளைகளை மிகுந்த சிரமப்பட்டே வளர்த்தேன். காளைக்கு சிறப்பான பயிற்சிகளை வழங்கினால் யார் காளையும் சிறந்த காளையாக வரும். அதற்கு நானும், என்னுடைய காளையும் சிறந்த உதாரணம்.

என்னோட இந்த காளை அலங்காநல்லூரில் அவிழ்த்தாலும் கண்டிப்பாக ஜெயிக்கும். ஆனால், ஒரு காளை ஒருபோட்டியில்தான் அனுமதிக்கப்படும் என்ற விதியால் என்னோட காளை அந்த ஜல்லிக்கட்டில் களம் இறங்க முடியவில்லை. அதனால், நல்ல காளைகளை அனைத்துப் போட்டியிலும் களம் இறக்க முடியவில்லை. இந்த விதியை தளர்த்த வேண்டும்’’ என்றார்.

- ஒய்.ஆண்டனி செல்வராஜ் / என்.சன்னாசி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x