காணும் பொங்கலை முன்னிட்டு கடற்கரைகளில் 1,200 போலீஸார் பாதுகாப்பு: சென்னை காவல் ஆணையர் தகவல்

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோலார் காவல் உதவி மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.படம்: பு.க.பிரவீன்
சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோலார் காவல் உதவி மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை கடற்கரைப் பகுதிகளில் 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

சென்னை பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் கண்காணிப்பு கோபுரம், மெரினா கடற்கரையில் இரவு நேரங்களில், சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் சிசிடிவி கேமரா வசதியுடன் கூடிய 4 சோலார் காவல் உதவி மையம் ஆகியவற்றை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று திறந்துவைத்தார்.

மேலும், பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள 28 சிசிடிவி கேமராக்களையும் அவர் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மெரினா மணல் பரப்பில் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு ஒளிரும் உடை வழங்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையங்களை பொதுமக்கள் எளிதில் அடையாளம் கண்டு, தேவையான உதவிகளைப் பெறலாம்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக பல்வேறு விஷயங்களை மேம்படுத்தி உள்ளோம். அதனால், கடற்கரையில் உயிரிழப்புகள் நிகழ்வது குறைந்துள்ளன. காணும் பொங்கலை முன்னிட்டு கடற்கரைப் பகுதிகளில், 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

காவல் துறையிடம் உள்ள 9 ட்ரோன்கள் மூலம் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்படும். கடலில் குளிப்பவர்களைக் கண்காணிப்பதற்காக ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in