Published : 15 Jan 2023 04:20 AM
Last Updated : 15 Jan 2023 04:20 AM
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. இதில் சிறந்த காளைக்கு கார், வீரர்களுக்கு மோட்டார் சைக்கிள், தங்கக் காசு உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக் கட்டு நடக்கிறது. நாளை (ஜன.16) மாட்டுப்பொங்கல் நாளில் மதுரை அருகே பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி கமிட்டி நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.
கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதிதங்கமணி தலைமையிலான நிர்வாகிகள், சோழவந்தான் எம்எல்ஏ ஆ.வெங்கடேசன் ஆகியோர் வாடிவாசல், காலரி உள்ளிட்ட ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை நேற்று பார்த்தனர்.
பின்னர் நிர்வாகிகள் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: வழக்கம்போல இந்த ஆண்டும் பாலமேடு ஜல்லிக்கட்டு எழுச்சியோடு அரசு வழி காட்டுதலுடன் நடைபெறும். பாலமேட்டில் காளைகளை அடக்கவும், வீரர்கள் மீது காளைகள் சீறிப் பாயவும் மிக நீளமான களம் உள்ளது. இதனால் ஜல்லிக்கட்டை அதிகமான பார்வையாளர்கள் உணர்வுப்பூர்வமாக பார்த்து ரசிக்க முடியும்.
இந்த ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் சிறந்த காளைக்கு முதல் பரிசாக முதல்வர் சார்பில் ஒரு கார், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கன்றுக் குட்டியுடன் நாட்டு பசு மாடு வழங்க உள்ளோம். சிறந்த மாடு பிடி வீரருக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி சார்பில் முதல் மற்றும் இரண்டாம் பரிசாக 2 பைக்குகள் வழங்கப்படும்.
மேலும் தங்கம், வெள்ளி நாணயங்கள், அண்டா முதல் சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, கட்டில், மெத்தை, உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும், பல்வேறு விலை உயர்ந்த பொருட்களும் பரிசுகளாக வழங்கப்படும். ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க முதல்வர், அமைச்சர் பி.மூர்த்தியை அழைத்துள்ளோம். 800 முதல் 1200 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்துவிட முயற்சி செய்யப்படும்.
ஆன்லைன் மூலம் மட்டுமே மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிட்டுள்ள எண்கள்படியே வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்படும். பாலமேடு பேரூராட்சியின் ஒத்துழைப்போடு ஜல்லிக்கட்டு ஏற்பாடு நடக்கிறது.
பார்வையாளர் அமரும் கேலரி கூடுதலாக அமைத்துள்ளோம். தவிர வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பார்வையாளர்களுக்கு ஆங்காங்கே தண்ணீர், உணவு, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துள்ளோம். அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், ஆ.வெங்கடேசன் எம்எல்ஏ ஆகியோர் ஒத்துழைப்பால் இதுவரை இல்லாத அளவு இந்தாண்டு ஜல்லிக்கட்டு சிறப்பாக இருக்கும். இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT