

உத்தமபாளையம்: தேனி மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால் ஒப்பந்ததாரர்கள் மூலம் வேளாண் பணியை மேற்கொள்ளும் நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது. இதுதவிர காய்கறி, பூ, பருத்தி உள்ளிட்ட விவசாயம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
இப்பகுதியைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் பலர் உயர் கல்வி பயின்று வெளியூர்களில் வேலைக்குச் சென்றுவிட்டனர். இதனால் வயதானவர்களே வேளாண் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, வெளியூர்களில் இருந்து தொழிலாளர்களை ஆட்டோ, வேனில் அழைத்து வருவதுடன் கூடுதல் கூலியையும் விவசாயிகள் அளித்து வருகின்றனர்.
இருப்பினும் சரியான நேரத்துக்கு தேவையான ஆட்கள் கிடைப்பது இல்லை. இதனால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது விவசாயிகள் பலரும் கூலியாட்களுக்கான பொறுப்பை ஒப்பந்ததாரர்களிடம் விட்டு விட்டனர். இதுகுறித்து ஒப்பந்ததாரர் முருகன் கூறுகையில், இளையதலைமுறையினர் பலரும் வெளியூர் வேலைக்குச் சென்றுவிட்டனர்.
100 நாள் வேலை உறுதித் திட்டம் போன்றவற்றாலும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒப்பந்த முறையில் விவசாயத் தொழிலாளர்களை வேளாண் பணியில் ஈடுபடுத்தும் முறையை பலர் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு அவ்வப்போது முன்பணம் வழங்குவது, வீட்டு விசேஷங்களில் பங்கேற்பது, உறவு முறை பழக்கவழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கூலி வேலைக்கு எப்போது அழைத்தாலும் வருவது போல ஏற்பாடு செய்துள்ளோம்.
விவசாயிகளிடம் நடவு, களை பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏக்கர் கணக்குப்படி ஒரு தொகை பெற்று கூலியாட்களை பணியமர்த்தி வருகிறோம் என்று கூறினார்.