

இன்று எம்ஜிஆர் நினைவு நாள்
எம்ஜிஆர் சிலையை வாரம் ஒருமுறை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து மாலை அணிவித்து வணங்கி வருகிறார் ஒரு கூலித் தொழிலாளி. இதை எம்ஜிஆருக்கு செய்யும் பணியாகவே அவர் கருதி செய்கிறார்
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் பி.நடராஜன்(61). கூலித் தொழிலாளியான இவர் 4-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அதன் பின் சினிமா போஸ்டர் ஒட்டுபவர்களுடன் சேர்ந்து போஸ்டர் ஒட்டுவதற்கு உதவும் பணியில் ஈடுபட்டார். அவர்களுடன் சேர்ந்து அதிகளவில் சினிமா பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எம்ஜிஆர் நடிப்பைக் கண்டு அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு உதவி வந்தவர், தனது 16 வயதில் தனியாக போஸ்டர் ஒட்ட ஆரம்பித்தார். ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தின் போஸ்டரை முதன்முதலில் ஒட்டியுள்ளார். தொடர்ந்து சினிமா போஸ்டர்கள் ஒட்டி வந்தவர், எம்ஜிஆர் கட்சி தொடங்கியதும், அதிமுக போஸ்டரையும் ஒட்டத் தொடங்கினார். இடைத்தேர்தல் எங்கு நடந்தாலும் போஸ்டர் ஒட்ட இவரை அழைத்து சென்றுள்ளனர் கட்சியினர்.
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர். முழு உருவச் சிலையை 2000-ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். எம்.ஜி.ஆர். மீது அன்று முதல் இன்று வரை தீராத பற்று கொண்டுள்ள நடராஜன் அந்த சிலையை வாரம் ஒருமுறை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்கிறார். தனது சொற்ப வருமானத்தில் ரூ.50 செலவு செய்து மாலை அணிவித்து வணங்கி வருகிறார். இதை கடந்த 16 ஆண்டுகளாக வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பி.நடராஜன் கூறிய தாவது: எம்.ஜி.ஆர். பட போஸ்டர் கள் அதிகளவில் ஒட்ட வாய்ப்பு கிடைத்ததால் அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை அவரைக் குல தெய்வமாகத்தான் நினைத்து வருகிறேன். ஒருமுறை திண்டுக் கல்லில் இருந்து லாரியில் ஏறி சென்னை சென்று, எம்.ஜி.ஆரை ராமாவரம் தோட்டத்தில் சந்தித் தேன்.
நடராஜன்
என்னுடன் பேசியவர், ‘வீட்டில் சொல்லிவிட்டு வந்தாயா?, எதற்கு வந்தாய்?’ என்றெல்லாம் கேள்வி கேட்டார். சாப்பிட்டுவிட்டு செல் என்றார். பின்னர் கையில் ரூ.300 கொடுத்தவர், உதவியாளரை அழைத்து, ‘கையில் காசு வைத்திருந்தால் சென்னையை விட்டு போகமாட்டான், இவனுக்கு ரயில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்’ என்றும் சொன்னார்.
எம்.ஜி.ஆர். கொடுத்த 300 ரூபாயை எனது தாயாரிடம் கொடுத்தேன். அவரது நினைவாக எம்.ஜி.ஆர். படத்தைா் தொடர்ந்து கழுத்தில் அணிந்து வருகிறேன். என் உயிருள்ள வரை அவரை மறக்க முடியாது.
எதையும் எதிர்பார்த்து அவர் மீது நான் அன்பு செலுத்தவில்லை. அரசியல்வாதிகளிடம் இருந்து இதுவரை நான் ஒரு பலனும் அடைந்ததில்லை. எம்.ஜி.ஆர். சிலையைச் சுத்தம் செய்வதை அவருக்கு செய்யும் பணியாகவே கருதுகிறேன். எனது உயிருள்ள வரை இப்பணி தொடரும் என்றார்.