ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்

ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி நேற்று வெளியிட்ட அறிக்கையின் விவரம்: அண்மையில் வடசென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், ஆளுநர் ஆர்.என்.ரவியை பிஹாரைச் சேர்ந்தவர் என குறிப்பிட்டு, அவரைப் பற்றி தகாத வார்த்தைகளாலும், தரக்குறைவாகவும் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரை இதுபோல அவர் பேசியுள்ளார். முதல்வரிடம் சொல்லிவிட்டுதான் கூட்டத்தில் பேசுகிறேன் என்றும் பார்த்து பேசுமாறு முதல்வர் சொன்னதாகவும் கூறியுள்ளார்.

கட்சியின் உயர் பொறுப்பில் இருப்பவர் இப்படி பேசுவதை, அக்கட்சியின் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருப்பது கண்டிக்கத்தக்கது.

இந்த மாநிலத்தின் முதல்நபரான ஆளுநரை அடிப்போம்,உதைப்போம், கொலை செய்வோம் என்றெல்லாம் பேசியிருப்பது, தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கை சீர்கெடுப்பது திமுகதான் என்பதை உறுதி செய்கிறது. சட்டம், ஒழுங்கை காக்க வேண்டியகடமை தனக்கு உள்ளது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர்ந்து, உடனடியாக ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in