Published : 14 Jan 2023 05:48 AM
Last Updated : 14 Jan 2023 05:48 AM

அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டுப் போட்டி: மாவட்ட நிர்வாகம், போலீஸார் விரிவான ஏற்பாடு

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தினர், போலீஸார் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை தினமான நாளை (ஜன.15) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. அதையடுத்து பாலமேட்டில் ஜன.16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று நடத்துகிறது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் ரூ.17 லட்சத்து 61 ஆயிரத்துக்கு டெண்டர் விட்டு விழா மேடை, பார்வையாளர் மேடை, தடுப்பு வேலிகள், கால்நடை பராமரிப்பு சோதனை மையம், மாடுபிடி வீரர்கள் சோதனை மையம்,மாடுகள் சேகரிக்கும் இடம் உள்ளிட்ட வசதிகளை செய்துள்ளது.

பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல் நிரந்தரமாக உள்ளது. ஆனால், அவனியாபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக வாடிவாசல் அமைக்கப்படுகிறது.

அதன்படி மேயர் இந்திராணி, மதுரை கோட்டாட்சியர் பிர்தவுஸ் பாத்திமா, வட்டாட்சியர் முத்துப்பாண்டி, மண்டல தலைவர் சுவிதா விமல், உதவி ஆணையர் முகமது கலாம் முஸ்தபா ஆகியோர் முகூர்த்த கால் நட்டு வாடிவாசல் பணியை தொடங்கி வைத்தனர். இப்பணி நேற்று மாலை முடிவடைந்தது.

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.கடந்த 2021-ம்ஆண்டு அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஆகியோர் நேரில் வந்து கண்டு ரசித்தனர்.

இந்த ஆண்டு அவனியாபுரத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், ஆளுநர் மாளிகை வட்டாரத்திலும், மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் இத்தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

டாஸ்மாக் மூடல்: தற்போது வரை உள்ளூர் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இந்த போட்டியை தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கும் நாட்களில் சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் வகையில் அந்தந்த ஊர்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அடைக்க ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

அலங்காநல்லூரில் உதயநிதி தொடங்கி வைக்கிறார்

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.17-ல்நடக்கிறது. இந்த போட்டியை தொடங்கிவைக்க விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி வருவதை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று உறுதி செய்தார். போட்டி ஏற்பாடுகளைஆட்சியர் அனீஷ்சேகர் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று அவர் ஆய்வு செய்தார்.

இங்கு போட்டியில் பங்கேற்க நிர்ணயிக்கப்பட்ட காளைகளை விட, ஆன்லைனில் நடைபெற்ற காளைகள் முன்பதிவு பல ஆயிரம் அதிகரித்துவிட்டது. இதனால், குலுக்கல் முறையில் காளைகளை தேர்வு செய்து டோக்கன் வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தற்போது, அலங்காநல்லூரில் வாடிவாசலுக்கு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. காளைகள் நின்று விளையாடும் திடல், பார்வையாளர் கேலரி அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x