

கராத்தே வீரர் ஹுசைனி புகாரின் பேரில் சசிகலா கணவர் நடராஜனை சென்னை போலீஸார் குற்றாலத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கராத்தே வீரர் ஹுசைனி சிற்ப வேலைகளும் செய்து வருகிறார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 27-ம் தேதி ஹுசைனி ஒரு புகார் கொடுத்தார். “முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நிறைய சிலைகள் செய்ய வேண்டியுள்ளது. அவற்றை செய்து கொடுக்கும்படி சசிகலாவின் கணவர் நடராஜன் என்னை கேட்டுக்கொண்டார். இந்த சிலைகளைச் செய்வதற்கு ரூ.1 கோடி செலவாகும் என்று நான் கூற, பல்வேறு தவணைகளில் ரூ.77 லட்சத்தை கொடுத்தனர். மீதமுள்ள ரூ.23 லட்சத்தை கொடுக்காமல் தாமதப்படுத்தினர்.
இந்நிலையில் என் வீட்டுக்கு வந்த இளவழகன், ஏர்போர்ட் மூர்த்தி ஆகியோர் சிலைகளைக் கேட்டு என்னிடம் தகராறு செய்தனர். மீதமுள்ள பணத்தை கொடுத்தால் சிலைகளை கொடுத்துவிடுகிறேன் என்றேன். அவர்கள் என் வீட்டைவிட்டு சென்ற சிறிது நேரத்தில் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளவழகன், 'நடராஜன் அவரது வீட்டுக்கு என்னை அழைப்பதாக' கூறினார்.
நான் உடனடியாக அங்கு போனேன். என்னை நடராஜன் அசிங்கமாகத் திட்டினார். துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். முள்ளிவாய்க்கால் முற்றத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் கார்த்திக், இளவழகன், ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் ஒருவரும் என்னை மிரட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் ஹுசைனி கூறியிருந்தார்.
புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து நடராஜனை கைது செய்ய முடிவு செய்யப்பட்டது. குற்றாலத்தில் இருந்த நடராஜனை சென்னை காவல் துறை துணை ஆணையர் ஜெயக்குமார் தலைமையிலான தனிப்படையினர் திங்கள்கிழமை காலையில் கைது செய்தனர்.
பின்னர் அவரை குற்றாலம் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்று அங்கு விசாரணை நடத்தப்பட்டது.
நடராஜனை செவ்வாய்க்கிழமை சென்னைக்கு அழைத்துவர காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ஹுசைனியின் புகாரில் கூறப்பட்டுள்ள 4 பேரும் விரைவில் கைது செய்யப்படு வார்கள் என்று தெரிகிறது.