Published : 14 Jan 2023 06:30 AM
Last Updated : 14 Jan 2023 06:30 AM

புதுக்கோட்டை | வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம்: சமூக நீதி கண்காணிப்புக் குழு ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் நேற்று ஆய்வு செய்யும் சமூக நீதி கண்காணிப்புக் குழுவினர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சமூக நீதிகண்காணிப்புக் குழு நேற்று நேரில் ஆய்வு செய்தது.

வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது டிச.26-ம் தேதி தெரியவந்தது. அன்றிலிருந்து அந்த குடிநீர்த் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, மாற்றுத் தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதுகுறித்து ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேரை உள்ளடக்கிய விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. எனினும்,இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இதற்கிடையில், இறையூரில் உள்ள அய்யனார் கோயிலுக்குள் வேங்கைவயல் பகுதி மக்களை செல்ல விடாமல் தடுத்தது, இரட்டைக் குவளை முறை கடைப்பிடித்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள வெள்ளனூர் போலீஸார், அதில் 2 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இத்தகைய சம்பவங்களைக் கண்டித்தும், மனிதக் கழிவை கலந்ததில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக சுவாமிநாதன் தேவதாஸ், ஆர். ராஜேந்திரன், கோ.கருணாநிதி, சாந்தி ரவீந்திரநாத் ஆகிய 4 உறுப்பினர்களைக் கொண்ட சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் துணைக் குழு நேற்று நேரில் வந்துவிசாரித்தது. அப்போது, வேங்கைவயல் பகுதி மக்கள், ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல் துறை அலுவலர்களிடம் இந்த சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்தனர்.

அதன்பிறகு, ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமுவுடன் கலந்துரையாடினர். இதில், வேங்கைவயல் சம்பவம்குறித்து மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் விளக்கினார்.

அப்போது, மாவட்ட வருவாய்அலுவலர்கள் மா.செல்வி, பெ.வே.சரவணன், கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஸ்ருதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தோர் கண்காணிப்புக் குழுவினரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதன்பின், கண்காணிப்புக் குழுவினர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த விவகாரத்தை மாவட்ட நிர்வாகம் முறையாக கையாண்டு வருகிறது. காவல் துறையினரின் செயல்பாடும் திருப்திகரமாக உள்ளது. இந்த விவகாரத்தில் வெளியூர்களில் இருந்து வந்து உள்ளூர்மக்களுக்கு தொல்லை கொடுப்போரை அனுமதிக்கக்கூடாதென காவல் துறையினருக்கு தெரிவித்துள்ளோம் என்றனர்.

85 பேரிடம் விசாரணை: எஸ்.பி

புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்ப ட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட கூடுதல் எஸ்.பி ரமே ஷ்கிருஷ்ணன் தலைமையில் 11 கொண்ட குழு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை மேற் கொள்ளப்பட்டுள்ளது. குடிநீர்
தொட்டியில் இருந்து பெறப்பட்ட மாதிரி தடய அறிவியல் ஆய்வ கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில்
நேர்மையாகவும், ஒளிவு மறை வின்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x