Published : 14 Jan 2023 06:06 AM
Last Updated : 14 Jan 2023 06:06 AM

திருநெல்வேலி | தமிழர் திருநாளை கொண்டாட தயாரான மக்கள்: கடைவீதிகளில் கரைபுரண்ட பொங்கல் உற்சாகம்

திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் பொங்கலை முன்னிட்டு மஞ்சள் குலை ,பூக்கள் விற்பனை நேற்று களைகட்டியிருந்தது. படங்கள்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி/தூத்துக்குடி/ தென்காசி: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி குமரி மாவட்டங்களில் பொங்கல் பொருட்கள் விற்பனையால் கடைவீதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன.

திருநெல்வேலி டவுன் காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வாங்க மக்கள் திரண்டனர். பூக்கள் விலை அதிகரித்திருந்தது. மல்லிகை கிலோ ரூ. 2,500 முதல் ரூ. 4 ஆயிரம் வரையிலும், பிச்சி ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,400 வரையிலும், கனகாம்பரம் ரூ.2 ஆயிரம், ரோஜா ரூ.300, செவ்வந்தி ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டன. மல்லி, பிச்சி பூக்களின் விலை சாதாரண நாட்களில் இருந்து கிலோவுக்கு ரூ. ஆயிரம் முதல் ரூ.1,500 வரை உயர்ந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுபோல் பொங்கலுக்கு அலங்காரத்துக்கு பயன்படுத்தப்படும் பூ மாலைகள் விற்பனை பாளையங்கோட்டை மார்க்கெட்டில் மும்முரமாக நடைபெற்றது. ரூ.50-ல் இருந்து ரூ.500 வரை தரத்துக்கு ஏற்றாற்போல் பூ மாலைகள் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கலர் கோல பொடிகள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

பாளையங்கோட்டையில் கோலப்பொடி விற்பனை செய்யும் ராயகிரி பேச்சிமுத்து கூறும்போது, “மணலை கலந்தும், அரிசி மாவு கலந்தும் தனித்தனியாக கோலப்பொடிகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளோம். இதற்கான சாயங்களை மதுரையில் இருந்து வாங்கி வந்துள்ளோம்” என்றார்.

பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் விற்பனைக்காக மஞ்சள் குலைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன. மஞ்சள் குலையானது ரூ.20 முதல் ரூ.40 வரை ரகத்துக்கு ஏற்றபடி விற்பனை செய்யப்பட்டது. ராதாபுரம், வள்ளியூர் வட்டாரங்களில் பனை ஓலை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டு ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட பனை ஓலை கட்டு, தற்போது ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென்காசி மாவட்டத்திலும் கடைவீதிகள் களைகட்டியிருந்தன.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 15 கரும்புகளை கொண்ட ஒரு கட்டு ரூ.400 முதல் ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பொங்கல் வைப்பதற்கான மண்பானைகளும் நகரில் ஆங்காங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. பொங்கல் பானை ரூ.150-க்கும், அடுப்பு ரூ.160-க்கும் விற்பனை செய்யப்பட்டன. ஏரல் அருகேயுள்ள வாழவல்லானை சேர்ந்த பொதிகை மகளிர் குழுவினர் கைவண்ணத்தில் பல்வேறு வண்ண ஓவியங்கள் வரையப்பட்ட மண் பானைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த பானைகள் அளவுக்கு ஏற்ப ரூ.200 முதல் ரூ.600 விலைக்கு விற்கப்படுகின்றன. மார்க்கெட்டில் கதலி ரூ.450, கோழிக்கோடு ரூ.600, சக்கை ரூ.400, கற்பூரவள்ளி ரூ.650, செவ்வாழை ரூ.850 முதல் ரூ.900 வரை, நாடு மற்றும் பச்சை வாழைத்தார் தலா ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டன.

தூத்துக்குடியில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள கரும்பு கட்டுகள்.
| படங்கள்: என்.ராஜேஷ் |

காய்கறி விலை உயர்வு

தென்மாவட்டங்களில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் காய்கறிகள் வரத்தும் குறைவாகவே உள்ளது. எனவே, விலை அதிகரித்துள்ளது.

திருநெல்வேலியில் காய்கறிகள் விலை விவரம்: தூத்துக்குடியில் விலை (அடைப்புக்குள்)

தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் இசக்கியம்மன் கோயில்
அருகே விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள்
தீட்டப்பட்ட பொங்கல் மண் பானைகள் | படங்கள்: என்.ராஜேஷ் |

கத்தரி வெள்ளை கிலோ ரூ.100 (140), வரி ரூ.60 (65) , வெண்டை 70 (ரூ.130), புடலை 24 (50), அவரைக்காய் 70 (55), பீர்க்கங்காய் 30 (50), மிளகாய் 60 (45), சின்ன வெங்காயம் 80 (85), பல்லாரி 30 (40), உருளை 28 (50), தக்காளி 30 (35), சேனைக் கிழங்கு 30, கருணை கிழங்கு 24 (25), சேனைக் கிழங்கு 30 (35), சிறு கிழங்கு 60, வள்ளி கிழங்கு 60, சேம்பு 60 (100), பிடி கிழங்கு 70, மாங்காய் 60 (70), பாகற்காய் சிறியது 40, பெரியது 30, பீட்ரூட் 30 (35), பூசணி நாடு 30, டிஸ்கோ 20, கேரட் 40 (45), பீன்ஸ் 60 (65), பச்சை பட்டாணி 50, நெல்லிக்காய் 40, எலுமிச்சை 25, முருங்கைக்காய் 15 முதல் 20, வாழைக்காய் ஒன்று 5 முதல் 7, கோவக்காய் 30, தேங்காய் 36, முட்டைக்கோஸ் 30, சுரைக்காய் 15, தடியங்காய் ரூ.20, முள்ளங்கி ரூ.25, சவ்சவ் 30-க்கு, பனங்கிழங்கு 20 எண்ணம் 100-க்கு விற்கப்பட்டது. பொங்கல் பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் தூத்துக்குடியில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x