Published : 13 Jan 2023 06:48 PM
Last Updated : 13 Jan 2023 06:48 PM

“அனைத்து கோயில்களும் புத்தொளி பெறுவது சிலருக்கு பிடிக்கவில்லை” - பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரானவர்களே தவிர, மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பதிலுரையில், "நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள், நாத்திகர்கள் என்று சொல்லி, கோயில்களை சரிவர பராமரிக்கவில்லை என்று ஒரு கூட்டம் வீண் வதந்திகளைச் செய்திகளாகப் பரப்பி கொண்டிருக்கிறது. நான் பல முறை இதற்கு பதில் சொல்லி இருக்கிறேன். நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரானவர்களே தவிர, மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல. மக்களின் மத நம்பிக்கையை தங்களது சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்பவர்களுக்குத்தான் நாங்கள் எதிரிகளே தவிர. நம்பிக்கையாளர்களுக்கு எதிரிகள் அல்ல.

அற நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலம், கட்டடம், மனை ஆகியவற்றில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 7-5-2021 முதல் 31-10-2022 வரையிலான காலத்தில் 3,150 ஏக்கர் நிலம் உள்ளிட்ட சுமார் 3,657 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உண்மையான பக்தர்கள் இதைப் போற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், போலியான கபடவேடதாரிகள் அரசுக்கு நல்ல பெயர் கிடைப்பதை பொறுத்துக்கொள்ள இயலாமல் தூற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி சாதனைகள் செய்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. அனைத்து கோயில்களும் புத்தொளி பெறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் அவர்கள் அவதூறு செய்துகொண்டிருக்கிறார்கள்.

கடந்த 7-5-2022 அன்று, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன்கீழ், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டது. அதன் தொடக்கமாக, சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து அவரவர் தொகுதிகளில் நிறைவேற்றப்படாத பல முக்கிய கோரிக்கைகள், தத்தமது மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பிவைக்குமாறு நான் கேட்டுக்கொண்டிருந்தேன். இதுவரை, 233 சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து கோரிக்கைப் பட்டியல் வரப்பெற்றுள்ளன.

உறுப்பினர்கள் நன்றாக கவனிக்க வேண்டும், ஒன்று மட்டும்தான் வரப்பெறவில்லை. மொத்தம் 234 உறுப்பினர்களில், 233 சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்தனர். யார் அளிக்கவில்லை என்பதை நான் சொல்ல விரும்பவில்லை, கொடுக்காதவர்களுக்கு தெரியும். இதுவரை, 233 சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து 1,483 பணிகளுக்கான கோரிக்கைப் பட்டியல் வரப்பெற்றுள்ளன.

இவற்றையெல்லாம் வகைப்பாடு செய்து, துறைவாரியாக மதிப்பீடுகள் செய்யப்பட்டு, அவற்றில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பணிகளைத் தேர்வு செய்யப்பட்டு, உயர்நிலைக் குழுவில் வைக்கப்பெற்று, வரும் நிதியாண்டில் நிருவாக அனுமதி வழங்கப்பட்டு, அப்பணிகள் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும் என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x