ஆளுநர் பற்றி பேசிய ஆர்.எஸ்.பாரதியை குண்டர் சட்டத்தில் கைது செய்க: தமிழக பாஜக

நாராயணன் திருப்பதி | கோப்புப்படம்.
நாராயணன் திருப்பதி | கோப்புப்படம்.
Updated on
1 min read

சென்னை: தமிழக ஆளுநர் பற்றி தரக்குறைவாக பொதுக்கூட்ட மேடை ஒன்றில் பேசிய ஆர்.எஸ்பாரதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வட சென்னையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘கொஞ்சம் கண்ஜாடை காட்டியிருந்தால் கவர்னர் வீட்டுக்கு போயிருக்க முடியுமா?’ என்கிறார். அதாவது ஆளுநரை கொலை செய்யக் கூட தயங்காது திமுக என்ற பொருள்பட பேசியிருக்கிறார். திமுகவின் அதிகாரத் திமிரை தெளிவாக இது உணர்த்துகிறது.

ஜனநாயக நாட்டில் ரவுடித்தனம் மூலம் ஆட்சி செய்ய தயங்க மாட்டோம் என்று உயர் பொறுப்பில் இவருக்கும் கட்சியின் தலைவர் சொன்னதை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்துக் கொண்டு, கேட்டுக் கொண்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தொடர்ந்து தரக் குறைவாக பேசி வந்த ஆர்.எஸ்.பாரதியை அனைவருக்குமான முதல்வர் என்று மார்தட்டி கொள்ளும் மு.க.ஸ்டாலின், தனக்கு சட்டம் - ஒழுங்கை காக்க வேண்டிய கடமை உள்ளது என்பதை உணர்ந்து உடனடியாக இந்த நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும். காவல் நிலையத்தில் ரவுடி லிஸ்டில் இடம்பெற வேண்டிய இந்த நபர் ஒரு ஆறு மாதங்களாவது சிறையில் இருந்தால் திருந்துவார்'' என்று நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in