

குற்றாலம் முக்கியமான சுற்றுலா தலமாகி, நாளுக்குநாள் கூட்டம் அதிகரிக்கிறது. சாடிவயல் வனத் துறை சாவடியிலிருந்து வனத் துறைக்குச் சொந்தமான வாகனத்தில் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும்.
சிலர் மதுபாட்டில்கள், திண்பண்டங்கள் கொண்டுவந்த பாலிதீன் பையை வனத்தில் வீசுவது, தீ வைப்பது உள்ளிட்டவற்றிலும் ஈடுபடுகிறார்கள். விடுமுறை தினங்களில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வருகின்றனர்.
கோவை குற்றாலத்துக்கு கீழே ஒரு பர்லாங் தொலைவில் சாடியாத்தா பாறை உள்ளது. அங்கிருந்து சாடிவயல் பள்ளத்துக்கு வாய்க்கால் செல்கிறது. சாடியாத்தா பாறை பகுதியில் யானைகளைக் காண சுற்றுலாப் பயணிகள் ஊருடுவும்போது, வனத் துறையினர் அவர்களை விரட்டுகின்றனர்.
சித்திரை பௌர்ணமி யாத்திரை
தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் சித்திரை பெளர்ணமி தினத்தையொட்டி சில நாட்கள் மட்டும் பக்தர்கள் யாத்திரை செல்வர். தற்போது, ஆண்டுக்கு 4 மாதங்கள் வரை மலை ஏறிச் செல்கின்றனர்.
பூண்டி மலை அடிவாரத்திலிருந்து வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் வழியில் உச்சிப் பிள்ளையார் கோயில், கைதட்டி சுனை, பாம்பாட்டி சுனை, ஒட்டர்சித்தர் சமாதி, பீமன் களியுருண்டை பாறை, அர்ச்சுனன் தவப்பாறை, திருநீறு மலை, கிரிமலை என 7 மலைகளைக் கடக்கும்போது, கழிவுகளை வீசிச் செல்கின்றனர். இங்குள்ள நீராதாரங்கள் நொய்யலின் நீர் பிடிப்புப் பகுதிகள்தான். சித்திரை பெளர்ணமியை முன்னிட்டு 3 நாட்களில் சுமார் 2 லட்சம் பேர் இங்கு வருவதால், பெரும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
இந்த மலைகளில் ஈச்சம்புல், சீமார்ப்புல், மலைத்தேன் சேகரிக்க வரும் மலைவாசிகள் கூறும்போது, “முன்பு மலைப் பொருட்கள் சேகரிக்க காடுகளுக்குள் செல்ல எங்களை வனத் துறையினர் எளிதில் அனுமதிப்பார்கள். இப்போது, சுலபமாக உள்ளே செல்ல முடிவதில்லை. நாங்கள் காடுகளுக்குள் போகும்போது வனப் பொருட்களைத்தான் சேகரிப்போம். ஆனால் சிலர் மரங்களை வெட்டிக் கடத்துகின்றனர். இதற்காக கேரளத்திலிருந்தும் சிலர் இங்கு வருகிறார்கள்.
மலைவாழ் மக்கள் மட்டும் சென்றபோது காடு பத்திரமாக இருந்தது. இப்போது, யாரெல்லாம் உள்ளே நுழைகிறார்கள் என்றே தெரியவில்லை. கடந்த ஆண்டு வனத்தில் எலும்புக்கூடான நிலையில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமூக விரோத கும்பல்களால் காடுகள் அழிந்து, நீர்நிலைகளும் வீணாகியுள்ளன. மலைகளில் முன்பு நிறைய சுனைகளும், நீரோடைகளும் இருந்தன. அவை இப்போது இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து விட்டன” என்றனர்.
பசுமைக் காடுகள் அழிப்பு
வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான சி.ஆர்.இளங்கோவன் கூறும்போது, “நொய்யலின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிப்பு 100 ஆண்டுகள் முன்பே தொடங்கிவிட்டது. கோவை நகர்மயமானது அதற்கு துணையானது. 40 ஆண்டுகளுக்கு முன் இருட்டுப் பள்ளத்துக்கு மேற்கே சிறுவாணி மலை அடிவாரம் நோக்கிச் சென்றால், மூன்று பக்கங்களிலும் தெரியும் நீலவண்ண மலைகளில் நூற்றுக்கணக்கான நீரோடைகளைக் காணலாம். இப்போது, ஓரிரு நீரோடைகளே மலையிலிருந்து இறங்குவதைக் காணமுடிகிறது. மலைகளின் உச்சியில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டதுதான் இதற்கு காரணம்.
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் கோவையில் நூற்பாலைகள் நீராவி இயந்திரங்களால் செயல்பட்டன. இதற்காக வண்டி, வண்டியாக மரங்களை இந்தக் காடுகளிலிருந்தே வெட்டிக்கொண்டு சென்றனர். அப்போது ஓரணாவுக்கு ஒரு வண்டி விறகு கிடைக்கும். காடுகளில் மழை நீரைத் தேக்கி வைத்த எண்ணற்ற மரங்கள் வெட்டப்பட்டன. அந்த மரங்கள் கசியவிடும் நீரிலிருந்து தாவரங்கள், புற்கள் விளைந்தன. அதன் மூலம் எப்போதும் காடுகளில் ஈரப்பதம் இருக்கும். பின்னர், அவை வெட்டப்பட்டு, தேக்கு மரங்கள் நடப்பட்டன.
தேக்கு மரத்தின் வேர்கள் தன்னை மட்டுமே நிலைநிறுத்தும். புற்கள், தாவரங்களை வளரவிடாது. தண்ணீரை வெகுவாக உறிஞ்சிக் கொள்ளும். அதனால், நீர்ப்பிடிப்புக் காடுகள் முற்றிலும் அழிந்தன. தற்போது, இப்பகுதியில் அதிக தேக்கு மரங்கள் இருப்பதைப் பார்ப்பவர்கள், வனப் பகுதி அழியவில்லை என்று கருதுகின்றனர். அது தவறு. நீர்ப்பிடிப்புக் காடுகள் என்பவை பசுமை மாறாக் காடுகளை உருவாக்குபவை.
கோவைக்கு தெற்கே அய்யாசாமி மலையிலிருந்து, மேற்கே வெள்ளியங்கிரி மலை, வடக்கே மருதமலை வரை உள்ள வனப் பகுதிகள் நொய்யலின் நீர்ப்பிடிப்புக் காடுகள்தான். இங்கு இப்போது காடுகளும் இல்லை. நீர்ச்சுனைகளும் இல்லை. அதனால் மழைப் பொழிவும் குறைந்துவிட்டது. எனவேதான், நொய்யலில் சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் வருகிறது” என்றார்.
வெள்ளமும்…வறட்சியும்…
கோவை வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.பன்னீர்செல்வம் கூறும்போது, “தமிழகத்தில் 1961-70-ம் ஆண்டுகளில் 589 மில்லிமீட்டர், 1971-80-ம் ஆண்டுகளில் 914, 1981-90-ம் ஆண்டுகளில் 635, 1991-2000-ம் ஆண்டுகளில் 724, 2001-10-ம் ஆண்டுகளில் 792 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் சராசரியாக 731 மில்லிமீட்டர் பெய்துள்ளது. எனினும், சராசரி மழையளவு 12 மில்லிமீட்டர் குறைந்துள்ளது. மொத்த மழையளவு கொஞ்சமாக குறைந்திருந்தாலும், பாதிப்பு என்பது இந்த மழை எத்தனை நாட்கள் கிடைத்தது என்பதில்தான் உள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2.5 மில்லிமீட்டர் பெய்தால்தான், நிலத்தை முழுமையாக நனைய வைக்கும்.
குளிர் பருவத்தில் 2 நாள் மழை நாள், கோடையில் 14 நாள் மழை, தென்மேற்குப் பருவத்தில் 27 நாள் மழை, வடகிழக்குப் பருவத்தில் 22 நாள் மழையும் சராசரியாக கிடைக்க வேண்டும். ஆனால் குளிர் பருவத்தில் 1 நாள், கோடையில் 11, தென்மேற்குப் பருவத்தில் 21 நாள், வடகிழக்குப் பருவத்தில் 22 நாள் மழையாக அது குறைந்துள்ளது. அந்தந்த சீசனில் பெய்யும் மழை அளவு முக்கியமானது. மழை பரவலாக பெய்ய வேண்டும். 4 நாள் மழை ஒரே நாளில் பெய்தாலும் சேதம்தான்.
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை போதுமான அளவுக்கு மழை பெய்கிறது. வால்பாறை, சோலையாறு, பரம்பிக்குளம் பகுதிகளில் அதிக மழை பெய்தாலும், வெள்ளியங்கிரி, சிறுவாணி பகுதிகளில் குறைவாகவே உள்ளது. குறிப்பிட்ட இடத்தில் மட்டும் மழை பெய்வது அங்கு வெள்ளப் பெருக்கையும், மற்ற பகுதிகளில் வறட்சியையும் உண்டாக்கும். இதைத்தான் பருவ நிலை மாற்றம் என்கிறோம்.
நொய்யல் நீராதாரப் பகுதிகளை சமீபகாலங்களில் பருவ நிலை மாற்றம் பெரிதும் பாதித்துள்ளது. இதற்கு புவி வெப்பமயமாதல் முக்கியக் காரணமாகும். கரியமிலவாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவை அதிகம் வெளியேறுவதால், இந்த பாதிப்புகள் மிகுதியாக உள்ளன. கோவையில் வெளியிடும் புகை, காடுகள் அழிப்பு மட்டுமே இதற்கு காரணமல்ல. உலகில் எந்த மூலையில் நடந்தாலும், அது மற்றொரு பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த அடிப்படையில்தான், நொய்யலின் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம்” என்றார்.