Published : 13 Jan 2023 06:29 PM
Last Updated : 13 Jan 2023 06:29 PM

“நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்காமல் சிறிய அளவில்தான் கட்டண சீர்திருத்தம்” - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கட்டணம் உயர்த்தினால்தான் சலுகைகள் வழங்கப்படும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்துவதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பதிலுரையில், "தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் மிக விளக்கமாகச் சொல்லி இருக்கிறது. பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு அண்மையில் மாநிலங்களினுடைய வளர்ச்சி நிலை குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள சமூக வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் (Social Progress Index) 63.3 புள்ளிகளைப் பெற்று, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.

இப்படிச் சொல்வது நானல்ல, தமிழ்நாடு அரசு அல்ல; மத்திய அரசு தான் இதனைச் சொல்லி இருக்கிறது. இந்தியாவில் இருக்கிற பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்திருக்கிறது என்றால் அது சாதாரணமானது அல்ல. அதுதான் அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் தத்துவத்தினுடைய ஊட்டமும், வளமும், வளர்ச்சித் திறனும்! நமது நோக்கம் ஒன்று தான், மக்கள் மனங்களின் மகிழ்ச்சி. இது ஒன்று தான் திராவிட மாடல் ஆட்சியின் முதலும் முடிவுமான ஒற்றை இலக்கு.

கடந்த ஆண்டு ஆளுநர் உரைக்கு முன்னதாக 'இந்தியா டுடே' ஆங்கில வார இதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் இந்தியாவினுடைய சிறந்த முதலமைச்சர் என்று எனக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஓராண்டு முடிந்த நிலையில் இந்த ஆண்டு ஆளுநர் உரைக்கு முன்னதாக சில வாரங்களுக்கு முன்னதாக அதே 'இந்தியா டுடே' ஆங்கில வார இதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் இந்தியாவின் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற தகுதியைப் பெற்றுள்ளோம். இந்தியாவில் ஒட்டுமொத்த மாநிலங்களின் செயல்பாட்டில் தமிழ்நாடு பல்வேறு பிரிவுகளில் முன்னேறி சாதனை பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சி நம் கண்ணுக்கு முன்னால் நன்கு தெரிகிறது. தமிழகத்தில் புதிய தொழில்கள் ஏராளமாக இந்த பதினைந்து மாத காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிய தொழில்கள் ஏராளமாக இந்த 20 மாத காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை 207 தொழில் நிறுவனங்கள் புதிதாகத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இதன்மூலம் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 209 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதுடன், 3 இலட்சத்து 44 ஆயிரத்து 150 நபர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட 207 தொழில் நிறுவனங்களில், இதுவரை 111 நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, 13 ஆயிரத்து 726 கோடி ரூபாய் முதலீடு வரப்பெற்றுள்ளது. 15 ஆயிரத்து 529 நபர்களுக்கு வேலை கிடைக்கப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வந்து நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் தொடங்க இங்கே வருகிறார்கள். அந்த வகையில் தொழில் அதிபர்களை, நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 14 ஆவது இடத்தில் இருந்து 3 ஆவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது நம்முடைய தமிழ்நாடு.

அண்மையில் "ஸ்டார்ட் அப் இந்தியா" வெளியிட்டிருக்கக்கூடிய தரவரிசைப்பட்டியலிலும் பல படிகள் முன்னேறி அரசின் சிறந்த புத்தொழில் செயல்பாடுகளுக்காக "லீடர்" என்கிற அங்கீகாரத்தினை பெற்றுள்ளது தமிழ்நாடு. கடந்த 2021-2022 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான துணிகர முதலீடுகளை திரட்டுவதில் தமிழ்நாடு, பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக நான்காம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. தொழில் வளர்ச்சி என்பது மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் முகமாகவும் முகவரியாகவும் இருக்கிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு; இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 விழுக்காடு; ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு; கார்கள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு; தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு! இவை அனைத்தும் இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தலை உயர்த்திச் சொல்கின்றன.

இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் இப்போது அதிகமாகி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டுமான பணவீக்கம் குறைந்துள்ளது. இதுவும் சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம்தான். தமிழ்நாட்டு மக்களின் வாங்கும் திறன் அதிகமாகி இருக்கிறது. இதற்குக் காரணம், சமூக வளர்ச்சித் திட்டங்களின் மூலமாக அனைத்துப் பிரிவு மக்களும் வளர்ந்ததுதான்.

இதுகுறித்து பிரபல ஆங்கில நாளிதழ் பிசினஸ் லைன் எழுதிய கட்டுரையில், தமிழ்நாட்டில் உணவுப்பொருள் விலை குறைந்துள்ளது என்று குறிப்பிட்டது. எரிபொருள் விலை அதிகரித்தாலும், பெண்களுக்கு வழங்கிய இலவச பேருந்து வசதி அதனை ஈடுசெய்துவிட்டது என்று குறிப்பிட்டது. பெண்களின் போக்குவரத்து செலவு குறைந்ததை சுட்டிக்காட்டியது.

''கல்வி, சுகாதாரம், சமூக நலத் திட்டங்கள், வேலைவாய்ப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் சிறப்பான குறியீடுகளை அடையும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் பணவீக்கம் குறைந்து வருகிறது" என்று எழுதியது. இதையே பிபிசி நிறுவனமும், இந்து ஆங்கில நாளிதழும் எழுதி இருக்கின்றன. இதே வேகத்தில் சென்றால் தமிழ்நாடு தன்னிகரற்ற மாநிலமாக உயர்ந்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மாநில அரசுகளின் வரி உரிமைகள், நிதி உரிமைகள் பலவும் ஏற்கெனவே பறிக்கப்பட்டுவிட்டன. நிதிக்காக மத்திய அரசை சார்ந்திருக்க வேண்டிய நிலை கடந்த 8 ஆண்டுகளில் மேலும் அதிகமாகிவிட்டது. அனைத்து நிதிகளையும் கேட்டுக் கேட்டு வாங்க வேண்டிய நிலைமையே இருக்கிறது. கட்டணம் உயர்த்தினால்தான் சலுகைகள் வழங்கப்படும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது.

இப்படிப்பட்ட நிலையிலும், தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சுமையைத் தந்துவிடக் கூடாது என்று பெரும்பாலான சுமையை அரசே தாங்கிக் கொண்டு, சிறிய அளவிலான கட்டண சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையில் அந்த நடவடிக்கைகள் நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்பட்டன. புதிய நிதி ஆதாரத்தை திரட்டுவதுதான் எங்கள் முன்னால் உள்ள மிக முக்கியமான, பெரிய சவாலாக இருக்கிறது என்பதையும் நான் மனம் திறந்து ஒப்புக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x