Published : 13 Jan 2023 04:39 PM
Last Updated : 13 Jan 2023 04:39 PM

“இரவுத் தூக்க நேரம் மட்டுமே எனது ஓய்வு நேரமாக இருக்கிறது” - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை என்பது போன்று பணிகள் அதிகம் வந்து, என்னை செயல்பட வைத்துக் கொண்டே இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பதிலுரையில், "கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டுக்கு நன்மை தரும் நாளாக உயர்ந்து வருகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். அதற்காக அவர்கள் பாராட்டி வருகிறார்கள். 'கடிகாரம் ஓடும் முன் ஓடு' என்று புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதினார். அதேபோலத்தான் நாங்கள் வேகமாகவும், அதே நேரத்தில் விவேகமாகவும் செயல்பட்டு வருகிறோம். ‘நான்’ என்று சொல்லும் போது என்னை மட்டுமல்ல, அமைச்சரவையை மட்டுமல்ல; நமது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாகச் சேர்த்துத்தான் நான் சொல்கிறேன்.

ஆட்சிப் பொறுப்பேற்றபின் மேற்கொண்ட எனது பயணங்கள் குறித்து பின்னோக்கிப் பார்க்கும் போது எனக்கே மலைப்பாக இருக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 655 நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுத்துள்ளேன். ஓராண்டு என்பது 365 நாட்களாக இருந்தாலும், ஒரு நாளைக்கு இரண்டு நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அளவுக்கு நான் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளேன். அதிலே 551 நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள். இடையில் கரோனா தாக்கப்பட்டு சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டியதாக இருந்தது. கால் வலி மற்றும் முதுகு வலி காரணமாக சில நாட்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்தேன். இத்தகைய இடர்பாடுகள் இல்லாமல் இருந்தால் இன்னும் 50 நிகழ்ச்சிகள் அதிகம் ஆகியிருக்கும்.

மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 9 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களைச் சந்தித்து விட்டு வந்திருக்கிறேன். நாள்தோறும் உழைப்பதாகச் சொல்வார்கள். இல்லை இல்லை நொடிக்கு நொடி உழைத்து வருகிறேன். என்னை வருத்திக் கொண்டு நான் அலையவில்லை.

யாரும் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும் நான் ஓயாத அலைச்சல்களை உருவாக்கிக் கொள்ளவில்லை. நான் என்னுடைய இயல்பில் தான் இருக்கிறேன். இதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. தலைவர் கருணாநிதி எங்களுக்கு இப்படித்தான் உழைக்கக் கற்றுக் கொடுத்தார்கள். அவரிடம் கற்ற பாடங்கள் என்னை இப்படி உழைக்கத் தூண்டுகிறது.

என்னுடைய அறையில் 'டேஷ் போர்டு' வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு நாளும் எந்தளவுக்கு முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை தொடர்ந்து நான் கண்காணித்து வருகிறேன். தீட்டிய திட்டங்கள் அனைத்தும் எந்தளவுக்கு ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டிருப்பதை அறிவதன் மூலமாக அரசாங்கத்தை முடுக்கிவிட்டுக் கொண்டு இருக்கிறேன்.

இரவுத் தூக்க நேரம் மட்டுமே எனது ஓய்வு நேரமாக இருக்கிறது. பொறுப்பு கூடக் கூட ஓய்வு என்பது குறைந்துவிடும். 'மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை' என்றார் புரட்சியாளர் மாவோ. அப்படித்தான் பணிகள் அதிகம் வந்து, என்னை செயல்பட வைத்துக் கொண்டே இருக்கிறது" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x