Published : 13 Jan 2023 03:47 PM
Last Updated : 13 Jan 2023 03:47 PM

ஆளுநரை விமர்சிக்க திமுகவுக்கு தகுதியில்லை: கிருஷ்ணசாமி விமர்சனம்

ராஜபாளையம்: “திராவிட முன்னேற்றக் கழகம் என பெயர் வைத்துள்ளவர்களுக்கு தமிழகம் என்று கூறிய ஆளுநரை விமர்சிப்பதற்கு தார்மிக தகுதி இல்லை” என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு பொதுமை பொங்கல் விழா நடைபெற்றது. அதில் மாநில தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கினார். பின்னர் விழாவில் அவர் பேசுகையில், "பொங்கல் என்பது தைத்திருநாள் தமிழர் திருநாள் மட்டுமல்ல, அது உழவர்களின் திருநாள். அனைத்து மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தேசிய ஒருமைப்பாட்டு பொதுமை பொங்கல் விழாவாக கொண்டாடுகிறோம்.

தமிழகத்தில் திராவிடம் என்று பேசியவர்கள்தான் 1967 முதல் இன்று வரை ஆட்சியில் இருக்கிறார்கள். தமிழர்கள் முன்னேற்ற கழகம் என்று பெயர் வைத்து இருந்தால் அவர்களது தமிழ் பாசத்தை ஏற்று கொள்ளலாம். ஆனால் திராவிடம் என்று கூறி மக்களை பிரித்து, பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் வேஷ்டி, சேலைக்கு மக்களை எதிர்பார்க்க வைத்தது தான் ஆட்சியாளர்களின் சாதனை.

தமிழர்களை திராவிடம் என்று ஒற்றுமைப்படுத்த முடியாததால் சாதி ரீதியாக அவர்களைப் பிரிக்கின்றனர். கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற சாதிக் கலவரங்களுக்கு திராவிடம்தான் காரணம். முற்போக்கு, திராவிடம், தமிழ் என வார்த்தை ஜாலம் செய்து மக்களை ஏமாற்றி ஒரு குடும்பம் மட்டுமே பலன்களை அனுபவித்து வருகிறது.

அடுத்த 10 ஆண்டுகளில் சாதி, மத, இன பாகுபாட்டை ஒழித்து, அனைவரையும் தமிழர்களாக, பாரத தாயின் புதல்வர்களாக ஒன்றிணைப்பதே எங்களின் இலக்கு.

திமுக சமூக நீதி என்பதை கெட்டவார்த்தையாக மாற்றியதால்தான் பொதுமை என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். தமிழக அரசு இலவச வேஷ்டி சேலை வழங்காததால் தான் நாங்கள் மக்களுக்கு அதை கொடுக்கிறோம்.

இமயமலை போன்று இந்தியாவின் அடையாளம் ராமர் பாலம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மிகப்பெரிய ஆலயங்களை கட்டியவர்களால் கடலின் நடுவே ஒரு பாலத்தை கட்டியிருக்க முடியாதா. எப்படி இருந்தாலும் ராமர் பாலம் என்பது நமது கலாச்சார அடையாளம். பண்பாட்டு அடையாளங்களில் யாரும் கை வைக்கக் கூடாது" என்று கிருஷ்ணசாமி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பாஜக தொழில் பிரிவு மாநில செயலாளர் ராமகிருஷ்ண ராஜா, சாலியர் மாகாஜன சங்க மாநில தலைவர் கணேசன், புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x