

சென்னை: திமுக அரசு இருபது மாதங்களில் இமாலய சாதனைகளை செய்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய பதிலுரையில்," கடல்கண்டு மலைகண்டு பயன் கொண்ட தமிழ்நாடு வாழ்க! களங்கண்டு கலை கண்டு கவின் கொண்ட தமிழ்நாடு வாழ்க! உடல்கொண்டு உரங்கொண்டு உயர்வாண்ட தமிழ்நாடு வாழ்க! உளமாண்டு உலகாண்டு புகழாண்ட தமிழ்நாடு வாழ்க! வாழ்கவே என்று தாய்த் தமிழ்நாட்டை வாழ்த்தி, பேரவைத் தலைவர், இந்த மாமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களையும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் கூறி, எனது உரையை நான் தொடங்குகிறேன்.
தாய்த் தமிழ்நாட்டைக் காக்க ஒப்படைத்துக் கொண்டு தூங்காமை, கல்வி, துணிவுடமை ஆகிய மூன்றையும் முறை மேற்கொண்டு முறைசெய்து வெல்லும் திராவிட மாடல் ஆட்சியானது நடைபெற்று வரும் வேளையில் மகிழ்ச்சியான மனநிலையில் இந்த மாமன்றத்தில் நான் கம்பீரமாக நிற்கிறேன்.
சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியானது வீரத்துடனும், விவேகத்துடன் நடைபெற்று வருகிறது என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல. இந்தியத் துணைக்கண்டமே இப்போது உணர்ந்துவிட்டது.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், சமத்துவப் போராளி அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர்களுக்கெல்லாம் பேரறிஞர் அண்ணா, எங்களை எல்லாம் ஆளாக்கி அழகு பார்த்த நவீன தமிழ்நாட்டின் சிற்பி தலைவர் கருணாநிதி, இவர்களது கொள்கைகளையும், இலட்சியங்களையும் கொண்டு செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே இந்த திராவிட மாடல் ஆட்சி!
இருபது மாதங்களைக் கடந்திருக்கிறது கழக அரசு. அதற்குள் இமாலய சாதனைகளைச் செய்திருக்கிறோம். நாம் கடந்துள்ள காலம் குறைவுதான். ஆனால் ஆற்றியுள்ள பணிகள் அதிகம். அதேநேரத்தில், இந்த இருபது மாத காலம் போனதே தெரியவில்லை. இலக்கினை அடைவதை நோக்கமாகக் கொண்டு நாம் செயல்பட்டோம். மக்களின் நலன் மட்டுமே நம்முடைய சிந்தையில் நின்றது; அதுவே மக்களின் மனதை வென்றது.
சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை மொழிப்பற்று இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் எழுப்பப்பட்ட பலம் வாய்ந்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அரசியல் களத்தில் எந்த நோக்கத்தை விதைத்ததோ, அதே நோக்கம் கொண்ட மக்களாட்சியை எந்தவித சமரசத்துக்கும் இடமின்றி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நாங்கள் நடத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் உயர்வுக்கும் வழிவகுக்கும் 'திராவிட மாடல்' கொள்கையை உருவாக்கி அதன் தடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி செயல்பட்டு வருகிறது. செயல்பட்டு வருகிறது என்பதை விட திராவிட மாடல் ஆட்சியானது வெற்றி பெற்று வருகிறது என்பதுதான் சரியானதாகும்.
'எல்லார்க்கும் எல்லாம்' என்ற அடிப்படையிலேயே தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியானது அமைய வேண்டும் என்று நாம் திட்டமிட்டோம். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்; அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்று விரும்பினோம். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.
பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் காணவிரும்பிய வளர்ச்சி. அது தான் திராவிட மாடல் வளர்ச்சி! அதுதான் தமிழ்நாடு காணும் தனித்துவமான வளர்ச்சி. அத்தகைய திராவிட மாடல் சிகரத்தை நோக்கிய பயணமானது ஒரு சரித்திரப் பயணமாக, ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்" என்று முதல்வர் பேசினார்.