

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை தொடங்கிவைக்க தமிழக ஆளுநர் வர இருப்பதாக தகவல் வருவதால் ஜல்லிக்கட்டு போட்டி கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கிறது. நாளை மறுநாள் அவனியாபுரம், 16-ம் தேதி பாலமேடு மற்றும் 17-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கின்றன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்று நடத்துகிறது. மாநகராட்சி நிர்வாகம், ரூ.17 லட்சத்து 61 ஆயிரத்திற்கு டெண்டர் விடப்பட்டு விழா மேடை பார்வையாளர் மேடை, தடுப்பு வேலிகள், கால்நடை பராமரிப்பு சோதனை மையம், மாடு பிடி வீரர்கள் சோதனை மையம், மாடுகள் சேகரிக்கும் இடம் உள்ளிட்ட போட்டி ஏற்பாடுகளை செய்துள்ளது.
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான வாடிவாசல் நிரந்ரதமாகவே போட்டி நடக்கும் இடத்தில் உள்ளது. ஆனால், அவனியாபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாகவே வாடிவாசல் அமைப்பார்கள். அதன்படி, பாரம்பரிய வழக்கப்படி வாடிவாசல் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
நேற்று மாலையுடன் வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தயாராக வைத்துவிட்டனர். முன்னதாக, மதுரை மாநகராட்சி மேயர் இந்து ராணி, மதுரை வருவாய் கோட்டச்சியர் பிர்தெளஸ் பாத்திமா, தாசில்தார் முத்து பாண்டி, மண்டலத் தலைவர் சுவிதா விமல், உதவி ஆணையர் முகமது கலாம் முஸ்தபா ஆகியோர் முகூர்த்த கால் நட்டு வாடிவாசல் பணியை துவக்கி வைத்தனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை வழக்கமாக உள்ளூர் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள். எதிர்கட்சித் தலைவர்கள் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில்தான் கலந்து கொள்வார்கள். ஏனென்றால், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முழுக்க முழுக்க, ஆளும் கட்சியினர் ஆதிக்கம் இருக்கும். அப்படியே எதிர்கட்சித் தலைவர்கள் யாராவது வந்தாலும் அவர்களுக்கு மேடையில் இடம் கிடைக்காது.
கடந்த சில ஆண்டிற்கு முன் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்வையிட வந்தார். அவர்கள் மாடுபிடி வீரர்களையும், காளை உரிமையார்களை உற்சாகப்படுத்தினார். அதனால், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி பாலமேடு, அலங்காநல்லூரை காட்டிலும் தேசிய அளவில் கவனம் பெற்றது.
அதுபோல், கடந்த அதிமுக ஆட்சியில் தற்போதைய விளையாட்டு துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியிலே கலந்து கொள்வார்கள். தற்போது திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க வருவதாக கூறப்படுகிறது.
அதுபோல், கடந்த சில நாளாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்வையிட வருவதாக கூறப்படுகிறது. ஆனால், ஆளுநர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தற்போது வரை உள்ளூர் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மட்டும் இந்தப் போட்டியை தொடங்கி வைக்க வருவதாக கூறப்படுகிறது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கும் நாளில் சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் வகையில் அந்த ஊர்கள் மற்றும் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளை அடைக்க ஆட்சியர் அனீஸ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடக்கும் அருகே உள்ள ராதாகிருஷ்ணன் தெரு, அவனியாபுரம் மெயின் ரோடு, அவனியாபுரம் முத்துப்பட்டி, அவனியாபுரம் பெரியார் ரோடு சந்தோஷ் நகர் ஜங்ஷன், அவனியாபுரம் பை-பாஸ் ரோடு, எம்எம்சி காலனி உள்ளிட்ட 11 டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை நடக்காது.
அதுபோல், அலங்காநல்லூரில் கோவில் பாப்பா குடி ரோடு, பாலமேடு மெயின் ரோடு, வெங்கடா ஜலபதி நகர் உள்பட 5 டாஸ்மாக் கடைகளுக்கு 17-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாலமேட்டிலும் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு போட்டி நடக்கும் 16-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.