

சென்னை: அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்றைய (ஜன.13) கேள்வி நேரத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர் கிரி, செங்கம் தொகுதியில் ஒரு அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "சுயநிதி கல்லூரிகளை விட அரசுக் கல்லூரிகளில் சேரவே மாணவர்கள் விருப்பம் காட்டுகின்றனர். அரசுக் கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில், கல்லூரிகளை அமைக்க நிதிநிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை 31 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு கலைக்கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக 20% இடங்கள் சேர்ப்பு. செங்கம் தொகுதியில் கல்லூரி அமைப்பது தொடர்பாக வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்தார்.