தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள நிலைமையை சமாளிக்க வங்கிகள் தீவிரம்

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள நிலைமையை சமாளிக்க வங்கிகள் தீவிரம்
Updated on
1 min read

அரசு ஊழியர்களின் சம்பள பணம் பிரச்சினையை ஒருவழியாக சமாளித்த வங்கிகள் அடுத்த கட்டமாக தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள பணம் வழங்க உள்ளன. நிலைமையை சமாளிக்க வங்கிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

மத்திய அரசு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததையடுத்து, பொதுமக்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை வழங்க முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன. போதிய அளவு புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாததே இதற்குக் காரணம்.

கடந்த 30-ம் தேதி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. ஏற்கெனவே பணத்தட்டுப்பாட்டு பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் வங்கிகள் இப்பிரச்சினையை எவ்வாறு சமாளிக்க போகிறது என்ற அச்சம் எழுந்தது. சம்பள தினத்தன்று அரசு ஊழியர்கள் பணம் எடுக்க வங்கியில் குவிந்தனர். அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் 24 ஆயிரம் வரை வழங்கப்பட்டது.

கடந்த 3 நாட்களில் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது சம்பள பணத்தில் பாதித் தொகைக்கும் மேல் எடுத்து விட்டனர். இந்நிலையில், தனியார் துறை ஊழியர்களுக்கு இனி வரும் நாட்களில் சம்பளம் வழங்கப்படுகிறது. பொதுவாக தனியார் துறைகளில் 4, 5, 8, 10 மற்றும் 11-ம் தேதிகளில் சம்பளம் வழங்கப்படுகிறது.

அரசுத் துறைகளை விட தனியார் துறையில் வேலைபார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களில் ஐடி உள்ளிட்ட ஒரு சில துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமே தங்களுடைய பணப் பரிவர்த்தனையை ஆன்லைன் மூலம் மேற்கொள்கின்றனர். மற்றவர்கள் அனைவரும் ரொக்கப் பணமாகவே பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். வரும் நாட்களில் தங்களுடைய சம்பள பணத்தை எடுக்க அவர்கள் வங்கியில் திரளுவர். எனவே இப்பிரச்சினையை தீர்க்க வங்கிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்து, பொதுத்துறை வங்கி மேலாளர் ஒருவர் கூறும்போது, ‘அரசு ஊழியர் களுக்கான சம்பள பணத்தை ஓரளவுக்கு பிரச்சினையின்றி விநியோகித்து விட்டோம். வரும் நாட்களில் தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பள தேதி வர உள்ளதால் அவர்களுக்கும் பிரச்சினையின்றி பணம் விநியோகிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக ரிசர்வ் வங்கியில் இருந்து கூடுதல் பணம் பெறுவது, டெபாசிட் பணத்தை அனைவருக்கும் சமமாக பகிர்ந்து அளிப்பது உள்ளிட்ட செயல்திட்டங்களை வகுத்து அதன்படி செயல்பட முடிவெடுத்துள்ளோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in