

அரசு, தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல தனி மனிதர்களும்கூட மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு வகைகளில் உதவியும், வாய்ப்புகளையும் உருவாக்கித் தர வேண்டும் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''டிச.3-ம் தேதி உலகெங்கும் மாற்றுத்திறனாளிகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது. உடல் ஊனம், புலன் குறைபாடு, பார்வை குறைபாடு, கேட்டல் குறைபாடு, நுகர்ச்சி மற்றும் சுவை சார் புலன் குறைபாடு, மனவளர்ச்சிக் குறைபாடு, உளப் பிறழ்ச்சி இவைகளுக்கு ஆளானோர்கள்தான் மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களிடத்தில் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான், அவர்களின் மனிதம் மதிக்கப்பட வேண்டும்.
கடந்த காலத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் இவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக அரசிடம் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டதையும், அப்போராட்டங்களின் போது அவர்கள் நடத்தப்பட்ட விதமும் சகித்துக் கொள்ள முடியாதவை. அந்த நிலை தொடரக் கூடாது.
அரசு, தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் வாய்ப்புள்ள தனி மனிதர்களும்கூட மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறை செலுத்தி, கல்வி, வேலைவாய்ப்புகள் உள்பட பல்வேறு வகையில் உதவிகளையும், வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்து, ஊனம் ஒரு குறையல்ல என்ற மன உறுதியை அவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்'' என்று கி.வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.