Published : 13 Jan 2023 06:56 AM
Last Updated : 13 Jan 2023 06:56 AM

ஈரோடு கிழக்கு தொகுதியை குறிவைக்கும் அதிமுக: நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தால் பரபரப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, அத்தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இடைத்தேர்தலைச் சந்திக்கும் வகையில், ஈரோடு அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார் திருமகன் ஈவெரா. அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியின் சார்பில் தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா போட்டியிட்டார். இத்தேர்தலில், 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார்.

தற்போது, உடல்நலக்குறைவால் திருமகன் ஈவெரா காலமான நிலையில், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் எந்தெந்த கட்சி வேட்பாளர்கள் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா போட்டியிட்டார். தற்போது மீண்டும் அவருக்கே வாய்ப்பு கிடைக்குமா, தேர்தலில் போட்டியிட தமாகா தயாராக உள்ளதா என்பது குறித்து அக்கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:

தேர்தலில் தோல்வியடைந்தாலும், ஈரோடு கிழக்குத் தொகுதியில் யுவராஜா பல்வேறு நலத்திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளார். அதிமுக கூட்டணியில் நாங்கள் தொடரும் நிலையில், யுவராஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு வேண்டும் என கேட்போம். அதேநேரத்தில், அவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றனர்.

இந்நிலையில், ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், வார்டு செயலாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் வழக்கப்பட்டு, பூத் கமிட்டி அமைக்கும் பணிகளைத் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கே.வி.ராமலிங்கம், இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது. இதற்கான ஏற்பாடாகத்தான் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது’ என்றனர்.

திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் பேசியபோது, அவர்கள் கூறியதாவது:

இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுமா என்பது குறித்த முடிவு ஈவிகேஎஸ் இளங்கோவன் கையில் உள்ளது. அவருக்கு மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளிக்கப்படுமானால், அவர் சம்மதத்தோடு, ஈரோடு கிழக்கில் திமுக போட்டியிட வாய்ப்புள்ளது. இத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான வி.சி. சந்திரகுமார் போட்டியிட வாய்ப்புள்ளது என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x