

கோவை: திரைப்படங்கள் வெளியாகும்போது உயிர்போகும் அளவுக்கு கொண்டாட்டங்கள் தேவையில்லை என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கோவை வருமானவரித்துறை சார்பில் இளம் தொழில் முனைவோரை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜூக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ் கனகராஜ், “நாம் செலுத்தும் வரி எங்கே செல்கிறது என்று தெரிந்தால், நாம் வரியை சுமையாக நினைக்காமல் சந்தோஷமாக செலுத்துவோம். இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, திரைப்படம் வெளியான கொண்டாட்டத்தின்போது சென்னையில் ரசிகர் ஒருவர் உயிரிழந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ரசிகர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். வெறும் பொழுதுபோக்கு அம்சம்தான் சினிமா. உயிரைவிடும் அளவுக்கு இதற்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை. திரைப்படங்கள் வெளியாகும்போது உயிர்போகும் அளவுக்கு கொண்டாட்டங்கள் தேவையில்லை” என்றார்.
தமிழகம், தமிழ்நாடு இதில் எவ்வாறு அழைக்க உங்களுக்கு விருப்பம் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று அழைப்பதில்தான் எனக்கு விருப்பம்”என்றார். நிகழ்ச்சியில் கோவை வருமானவரித்துறை தலைமை ஆணையர் பூபால் ரெட்டி இளம் தொழில் முனைவோரை கவுரவித்தார்.