

சென்னை, காஞ்சிபுரம் பகுதியில் வார்தா புயல் காரணமாக ஏற்பட்ட சேதத்தால் வண்டலூர் உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது.
காஞ்சிபுரத்தில் வார்தா புயல் காரணமாக கடந்த 12-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டது. அப்போது சென்னையை உலுக்கிய புயல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்களையும் சாய்த்துவிட்டுச் சென்றது. இதன் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது. பூங்காவை சீரமைக்க ஒரு வாரம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதன் பிறகே திறக்கப்பட உள்ளது.
பூங்கா 602 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. 163 வகை யான உயிரினங்களும், 1657 விலங்குகளும் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். இதனிடையே பூங்காவை சீரமைக்க வசதியாக இந்த பூங்கா மூடப்பட்டுள்ளதாகவும் முறையான அறிவிப்புக்குப் பிறகே திறக்கப்படும் என்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காஞ்சி புரம் மாவட்டத்தில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிகாரிகள் உயிரியல் பூங்காவின் வரைபடத்தை வைத்துக் கொண்டு சேதம் அடைந்த பகுதிகளை விளக்கினர். அங்கு விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.