

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடைபெறும் சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழாவை முன்னிட்டு நேற்று 10-க்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது.
தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் விடுமுறை நாட்களான ஜனவரி 13 (இன்று) முதல் 15-ம் தேதி வரை பலூன் திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஒத்திகை நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இதில் பிரேசில், அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட டைனோசர், கரடி, கார்ட்டூன், டினோஉள்ளிட்ட வடிவிலான 10-க்கும்மேற்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன. சுமார் 60 அடி முதல் 100 அடி வரை உயரம் கொண்ட இந்த ராட்சத பலூன்கள் தங்கள் வீடுகளுக்கு மேல் பறந்து சென்றதை அப்பகுதி மக்கள் வியப்புடன் கண்டு மகிழ்ந்தனர்.
பலர் மொபைல் போன்களில் வீடியோ எடுத்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்தனர். பலூன் திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 300 அடி உயரத்துக்கு மேல் பறந்து செல்லும் வெப்பக் காற்று பலூனில் பயணிக்கும் போது, பொள்ளாச்சியின் அழகான நிலப்பரப்பை, கழுகு பார்வையில் பார்க்க முடியும். பாலக்காட்டு கணவாய் பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சியில் காற்றின் வேகம், தட்பவெப்பம் ஆகியன இந்த விழா நடத்த ஏதுவாக அமைந்துள்ளதாக விழா குழுவினர் தெரிவித்தனர்.