15 மீனவர்கள், 107 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

15 மீனவர்கள், 107 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
Updated on
2 min read

இலங்கை வசம் உள்ள 15 மீனவர்கள் மற்றும் 107 படகுகளை காலம் தாழ்த்தாமல் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பாக் நீரிணை பகுதியில் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். கடந்த 10-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடித்தளத்தில் இருந்து இரண்டு படகுகளில் 8 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பி, தற்போது புதுக்கோட்டை மணமேல்குடியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை தடுக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமை யிலான தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதும், நிரந்தரமான தீர்வு கிடைக்கவில்லை. அதே நேரம், இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகள் மேலும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக இலங்கை, இந்திய அரசுகள் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளன. அப்போது இந்திய மீனவர்களுக்கு எதிரான இது போன்ற நடவடிக்கை இருக்காது என உறுதியளிக்கப்பட்டது. இருப்பி னும் தாக்குதல் தொடர்கிறது.

எங்கள் தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கச்சத்தீவு குறித்த இந்தியா- இலங்கை இடையிலான 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்து, பாக் நீரிணை பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்க வேண்டும் என கோரி வந்தார். மேலும், இந்தியா- இலங்கை இடையிலான கடல் எல்லையை முடிந்துவிட்ட ஒன்றாக கருதக்கூடாது என மத்திய அரசையும் வலியுறுத்தினார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

தற்போதைய சூழலில், தமிழகத் தைச் சேர்ந்த 15 தமிழக மீனவர்கள் இலங்கை வசம் உள்ளனர். தூதரகம் மூலமாக இலங்கை அரசுடன் பேசி, விரைவில் அந்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மீனவர்களின் படகுகளை விடுவிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் இலங்கை அரசு தொடர்ந்து இருந்து வருகிறது. இது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. எனவே அந்த 107 படகுகளும் சேதமடைவதற்கு முன், அவற்றை விடுவிக்க, இலங்கை அரசுடன் உயர்மட்ட அளவில் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தாங்கள் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொடூரமாக தாக்கப்படுவதை தடுத்து, அவர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இலங்கை வசம் உள்ள 15 மீனவர்கள், 107 படகுகளை காலம்தாழ்த்தாமல் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in