

சிறு தானிய உணவு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன் என்று ‘99 கி.மீ. காபி மேஜிக்’ உணவக உரிமையாளர் மனோ சாலமன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து பல்வேறுமாவட்டங்களுக்கு செல்வோருக்கு வழியில் உள்ள உணவகங்களில் கிடைக்கும் தரமில்லாத உணவும், தாறுமாறான விலையும் கசப்பான அனுபவத்தையே கொடுக்கின்றன.
தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி, ஏராளமானோர் கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வெளியூர்களுக்குப் பயணிக்கும்போது, வழியில் தரமான உணவகங்களைத் தேடுகின்றனர்.
அப்படித் தேடும்போது கண்ணில் பட்டது ‘99 கிலோமீட்டர் காபி மேஜிக்’. வகை வகையான சிறுதானிய உணவுகளை வழங்கும் இந்த உணவகம் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிரப்பாக்கத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள இந்த உணவகத்தில் வாகனங்களை நிறுத்த விசாலமான இடம் உள்ளது. வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவு சாப்பிட அனுமதிக்கப்படும் என்று எழுதிவைத்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
மேலும், குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுப் பொருட்கள், இயற்கை வேளாண் விளை பொருட்கள், கைத்தறி உடைகள் விற்பனை செய்யும் கடைகளும் இங்குள்ளன. சீரகக்குடிநீர், ஓமக் குடிநீர், நன்னாரித்தண்ணீர் உள்ளிட்ட 7 வகை தண்ணீர் இலவசமாக அளிக்கப்படுகிறது.
பனங் கற்கண்டு மூலிகைப் பால், இஞ்சி டீ, கருப்பட்டி காபி, மூலிகை சூப், உளுந்து களி, ஓம கோதுமை சப்பாத்தி, காய்கறிக் கூட்டு, புதினா சாதம், சாமை சாம்பார் சாதம், வரகரிசி ரசம் சாதம், குதிரைவாலி தயிர் சாதம், மிளகாய் வற்றல், அப்பளம், தினைப் பாயசம், முடக்கத்தான் தோசை, சீரக கோதுமை பூரி, வல்லாரை, தூதுவளை, ராகி, ரவை தோசைகள், மிளகு இட்லி என பாரம்பரியம் மிக்க, சத்தான உணவுகள் கிடைக்கின்றன.
உணவக உரிமையாளர் மனோ சாலமன், விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். “நெடுஞ்சாலை உணவகத்தால் கிடைத்த கசப்பான அனுபவத்தால்தான் இந்த உணவகத்தை 11 ஆண்டுகளுக்கு முன் தொடங்கினேன். ஆரோக்கியமான, சத்தான உணவு வழங்க வேண்டுமென்பதற்காக சிறுதானியங்களையும், செக்கில் தயாரித்த நல்ல எண்ணெய் வகைகளையும் பயன்படுத்துகிறேன்.
சித்த மருத்துவர் சிவராமன், நம்மாழ்வாரின் சீடர்கள், எழுத்தாளர்கள் பாலகுமாரன், எஸ் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த உணவகம் தொடங்க ஆர்வமூட்டினர். இதுபோன்ற உணவகம் தொடங்க விரும்புவோருக்கு வழிகாட்டத் தயாராக இருக்கிறேன்.
சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக 2023-ம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இது இந்தியாவால் முன்மொழியப்பட்டு, வங்க தேசம், கென்யா, நேபாளம், நைஜீரியா, ரஷ்யா உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நாடுகளால் ஆதரவளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சிறுதானிய உணவு குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்” என்றார்.
சென்னையில் இருந்து 99 கி.மீ. தொலைவில் உள்ள இந்த உணவகத்தின் வாடிக்கையாளர் வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி கூறும்போது, “சிறுதானிய உணவு உற்பத்திக்கு அரசு இன்னும் அதிக ஊக்கம் அளிக்க வேண்டும். உடலுக்கு கேடு விளைவிக்காத சிறு தானிய உணவுகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். மீண்டும் நாம் நமது பாராம்பரியத்தை நோக்கிப் பயணிக்கிறோம்” என்றார்.