

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் சென்னையில் இருந்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குப் பயணித்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள்சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். அதன்படி, ஜன.12, 13, 14 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் உட்பட 16,932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி முதல் நாளான நேற்று, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 651 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 1,508 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையைப் பொறுத்தவரை 6 சிறப்பு பேருந்து நிலையங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளை இணைக்கும் வகையில் 340 மாநகர பேருந்துகள் இயங்கின.
கோயம்பேட்டில் 10 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதேபோல் தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய இடங்களில் தலா 1 முன்பதிவு மையம்உள்ளது. இதில் முன்பதிவு செய்துபயணிக்கவும், முன்பதிவு செய்யாமல் நேரடியாக பேருந்துகளில் பயணிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட அரசு விரைவு பேருந்துகள் அனைத்தும், பூந்தமல்லி, நசரத்பேட்டை, வண்டலூர் வழியாக இயக்கப்பட்டன. இதனால் தாம்பரம், பெருங்களத்தூரில் இருந்து தென் தமிழகம் செல்ல முன்பதிவு செய்த பயணிகள் அனைவரும் வண்டலூர், கிளாம்பாக்கம் போன்றஇடங்களுக்குச் சென்று பேருந்துகளில் பயணித்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: வியாழக்கிழமை குறைந்த அளவிலான மக்களே செல்வார்கள் என்பதால் 2,159 சிறப்பு பேருந்துகள் மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதேநேரம், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் அறிவுறுத்தியிருந்தோம். சிறப்பு பேருந்துகளில் சென்னையில் இருந்து சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
சனிக்கிழமை போகி பண்டிகை விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை (இன்று) அதிக அளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். எனவேசென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,855 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,214 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
முன்பதிவைப் பொறுத்தவரை ஜன.11 முதல் 20-ம் தேதி வரையிலான காலத்தில் சென்னையில் இருந்து செல்ல 74,242 பேரும், பிற ஊர்களில் இருந்து பயணிக்க 91,725 என மொத்தம் 1.65 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். டிஎன்எஸ்டிசி செயலி மற்றும் tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். பேருந்து இயக்க விவரம் மற்றும் புகார்களுக்கு 9445014450, 9445014436 ஆகிய எண்களை அணுகலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.